PUBLISHED ON : அக் 18, 2016

“இங்குள்ள பலகாரங்கள் நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல” என்று கடைகளில் அறிவிப்பு வைத்திருப்பார்கள். அந்த அறிவிப்பில் 'அல்ல' என்பது மட்டும் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும்.
மேலோட்டமான பார்வைக்கு அந்த அறிவிப்பு 'இங்குள்ள பலகாரங்கள் நெய்யினால் செய்யப்பட்டவை' என்றே தோன்றும். ஏனென்றால், அதை எதிர்மறை வாக்கியமாக்கும் 'அல்ல' என்னும் சொல் சிறிதாய் இருப்பதே காரணம்.
நேர்மறையாய் இருக்கும் வாக்கியத்தில் ஒரேயொரு சொல் சேர்த்தால், அது எதிர்மறை வாக்கியமாகி விடுகிறது. இங்கே 'அல்ல' என்பது எதிர்மறை வாக்கியம்.
பன்மை வினைமுற்றோடு (செய்யப்பட்டவை), அல்ல என்ற சொல் சேர்ந்தால் எதிர்மறைப் பொருள் தோன்றும். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், பன்மை வினைமுற்று என்பதைத்தான்.
தமிழில் ஒரு வாக்கியத்தில் தோன்றும் வினைமுற்றுகள் ஒருமை பன்மையை உணர்த்துகின்றன. ஆடு மேய்ந்தது, ஆடுகள் மேய்ந்தன. இதில் மேய்ந்தது என்பது ஒருமை வினைமுற்று. மேய்ந்தன என்பது பன்மை வினைமுற்று.
வினைமுற்று பன்மை என்றால், 'அல்ல' பயன்படுத்தலாம். வினைமுற்று ஒருமை என்றால், 'அன்று' பயன்படுத்த வேண்டும். “அவன் சொன்னது உண்மை அல்ல” என்று எழுதக்கூடாது. ஏன்? சொன்னது என்பது ஒருமை. சொன்னவை என்பதுதான் பன்மை.
ஒருமைக்கு அன்று என்பதைத்தான் எதிர்மறை வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும். “அவன் சொன்னது உண்மை அன்று” என்று எழுதவேண்டும். “அவன் சொன்னவை உண்மைகள் அல்ல” என்று பன்மையில் எழுதுவதே திருத்தமாக இருக்கும்.
இன்னும் எளிமையாகச் சொல்தென்றால், ஒருமையை மறுக்க “அன்று” போட வேண்டும். பன்மையை மறுக்க “அல்ல” போட வேண்டும்.
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்:
* இன்று விடுமுறை நாள் அன்று
* இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல
* அந்தக் கேள்விக்கு இது விடையன்று
* பறித்தவை யாவும் மலர்கள் அல்ல
இவ்வாறு ஒருமை, பன்மை உணர்ந்து “அன்று, அல்ல” ஆகிய இரண்டையும் பயன்படுத்த வேண்டும்.
- மகுடேசுவரன்
