PUBLISHED ON : அக் 18, 2016

காகம் கண்ணம்மா வாயில், வந்தபடியெல்லாம் புனிதவதியைத் திட்டித் தீர்த்தது. அதைக் கேட்டு, போலீஸ் அதிகாரியான, நாய் பெரும்பல்லன் ஓடி வந்தது. அதைப்போன்று நேர்மையும் கடமை உணர்வும் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியை எங்குமே பார்க்க முடியாது. இரவு முழுதும் சற்றும் தூங்காமல் கிராமத்தைச் சுற்றி வந்து காவல் காத்துக்கொண்டிருக்கும். அதற்குத் தெரியாமல் ஒரு கொசுகூட கிராமத்தில் பறக்க முடியாது. அந்த அதிகாலை அமைதியில் கண்ணம்மாவின் வசைகள் வெகுதூரம்வரை கேட்டன. அதனால்தான், என்ன பிரச்சினை என்று தெரிந்துகொள்வதற்காக பெரும்பல்லன் ஓடி வந்தது.
அதைப் பார்த்தவுடன் புனிதவதிக் குதிரை கிணற்றை நோக்கிப் பாய்ந்தது. கண்ணம்மா, பக்கத்திலிருந்த மளிகை வியாபாரி அணில் அண்ணாச்சியின் சிறிய வாசலைப் பெருக்கத் தொடங்கியது. நல்லிதயன் குதிரை, “வாருங்கள் போலீஸ் அதிகாரி அவர்களே, காப்பி குடித்துவிட்டுப் போகலாம்” என்று பெரும்பல்லனை அழைத்தது. பெரும்பல்லன் லேசாக உறுமியவாறு சுற்றிலும் பார்த்தது. “நான் காப்பி குடிக்கும் நேரத்தில் கிராமத்தில் எங்காவது குற்றம் நடந்துவிட்டால் என்ன செய்வது?” என்று கேட்டுவிட்டு கம்பீரமாகத் திரும்பிச் சென்றது.
காகம் கண்ணம்மா விரைவாக குரங்கு வாலாண்டியின் உணவு விடுதிக்கு வந்தது. புனிதவதிக் குதிரை மீது ஏற்பட்ட கோபம் இன்னும் அதற்கு அடங்கவில்லை. 'அருமையான இந்தக் காலை நேரத்தில் அந்தப் புனிதவதிக் குதிரை எவ்வளவு கேவலமாகப் பேசுகிறாள்! ஆயினும் அவளுக்கு ரொம்பத்தான் திமிர் ஏறிவிட்டது. அவள் சமீபத்தில்தான் இந்தக் கிராமத்துக்கு வந்திருக்கிறாள். இப்படி வீட்டு வேலைகள் செய்து எனக்குப் பழக்கமே இல்லையென்றும், குதிரைப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தேன் என்றும் பெருமை பீற்றிக்கொள்வாள். நல்லிதயன் குதிரைக்கு புனிதவதியிடம் சற்று பயம். அதை அடக்கி வைப்பதற்கு நல்லிதயனால் முடியவில்லை. ஆனால், எனக்கு அவளிடம் பயமொன்றுமில்லை. புனிதவதியை அடக்கி ஒடுக்க என்னால் முடியும். இன்றைக்கே அவளுக்கு ஒரு பாடம் புகட்டியிருக்க முடியும். ஆனால் அந்த நேரம் பார்த்து போலீஸ் அதிகாரி வந்துவிட்டாரே! என்ன செய்வது?'
குரங்கு வாலாண்டியின் உணவு விடுதியின் சமையலறையில் வெளிச்சம் தெரிகிறது. வாலாண்டியும் அதன் குடும்பத்தினரும் விழித்தெழுந்து சமையல் வேலையை ஆரம்பித்திருப்பார்கள். கூலி வேலைக்குச் செல்லும் விலங்குகள் எல்லாம் வாலாண்டியின் உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லும். இங்கே காலை உணவு சாப்பிட்டால் மதியம்வரை பசியெடுக்காது. வாலாண்டிக்கு ஒரு கைராசியும் இருக்கிறது. அது சமைத்த உணவுப் பொருட்களெல்லாம் நல்ல சுவையுடன் இருக்கும். வாலாண்டிக்குக் கொஞ்சம் குறும்புத்தனம் அதிகம். சாப்பிட வரும் விலங்குகளையும் பறவைகளையும் கேலி செய்யாமல் இருக்காது.
“என்ன கண்ணம்மா? பொழுது விடியும் முன்பே போலீஸ் அதிகாரி வந்துவிட்டாரே!” குரங்கு வாலாண்டி சமையலறைக் கதவைத் திறந்து, இளித்தவாறு கேட்டது. கண்ணம்மாவுக்குக் கோபம் வந்தது. எல்லாவற்றையும் தெரிந்துகொண்டே கேட்கிறது இந்த வாலாண்டி. சரியான திருட்டுக் குரங்கு! கண்ணம்மா எதுவும் பேசாமல் வாசலையும் சாலையையும் பெருக்கத் தொடங்கியது.
அப்போது, காய்கறி வியாபாரியான முயல் மொசமொசப்பன், ஒரு கூடை காய்கறிகளுடன் உணவு விடுதி வாசலுக்கு வந்தது. காய்கறிக் கூடையை வாலாண்டியிடம் கொடுத்தது. பிறகு ஒரு பெஞ்சின் மீது ஏறி, கால்மேல் கால்போட்டு அமர்ந்தது. உணவு விடுதிக்குத் தேவையான காய்கறிகளை மொசமொசப்பன்தான் கொண்டு வந்து கொடுக்கும். உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு காப்பி குடிக்கும். தினமும் மாலை நேரத்தில், தர வேண்டிய பணத்தைப் பற்றி அதற்கும் வாலாண்டிக்கும் இடையில் சச்சரவு ஏற்படும். அதைப் பார்ப்பவர்கள், 'முயல் மொசமொசப்பன் இப்படிக் கூச்சல் போடுகிறானே! இனி அவன் இந்த உணவு விடுதியின் வாசலையே மிதிக்க மாட்டான்போலிருக்கிறதே!' என்று நினைப்பார்கள். ஆனால், மறுநாள் காலையிலும் முதல் வாடிக்கையாளனாக மொசமொசப்பன் வராமல் இருக்காது.
காகம் கண்ணம்மா, வாசலைக் கூட்டிவிட்டு கை கழுவி உள்ளே சென்றது. முயல் மொசமொசப்பன் அமர்ந்திருந்த இடத்துக்கு சற்று அப்பால் இருந்த பெஞ்சில் அமர்ந்தது. குரங்கு வாலாண்டியின் சிறிய மகள் சிங்காரிக் குரங்கு, கண்ணம்மாவுக்கும் மொசமொசப்பனுக்கும் சூடான தோசையும் காப்பியும் கொண்டு வந்து கொடுத்தது. மொசமொசப்பன், வாலாண்டியிடம் பருவநிலையைப் பற்றியும், காய்கறித் தோட்டத்தில் விளைச்சல் மோசமானதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தது. கண்ணம்மா எதுவும் பேசாமல் காப்பி குடித்தது.
அப்போதுதான், கிராமத்தின் மருத்துவரான, பூனை பெரியமியா,ன் உணவு விடுதிக்கு வந்தது. ஓசையெழுப்பாமல் மெதுவாக ஏறி வந்து பெஞ்சின் மீது அமர்ந்தது. வாலாண்டி மிகவும் மரியாதையுடன், பாலும், நெய்யில் பொரித்த ரொட்டியும் கொண்டு வந்து வைத்தது. அதுதான் பெரியமியானின் காலை உணவு. அது கம்பீரமாக சாப்பிடத் தொடங்கியபோது காகம் கண்ணம்மா அதனிடம் கேட்டது:
“உங்கள் வீட்டின் சாவியைக் கொடுங்கள் டாக்டரய்யா. அதைப் பெருக்கிவிட்டு நான் பச்சைக்கிளி கிக்கியம்மாவின் வீட்டுக்குப் போக வேண்டும். இன்று கிக்கியம்மாவுக்குப் பிறந்தநாள். சீக்கிரமே வரும்படி சொல்லியிருக்கிறார்கள்.”
“கிக்கியம்மா டீச்சர் பிறந்தநாளுக்கு என்னையும் அழைத்திருக்கிறார்கள்” என்றது மொசமொசப்பன்.
பூனை பெரியமியான் கண்ணாடியைக் கழற்றி சட்டையின் முனையால் துடைத்துக்கொண்டு கண்ணம்மாவைப் பார்த்தது. 'இவனுக்கு தீக்கண்ணன் எனும் பட்டப்பெயர் எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!' என்று கண்ணம்மா யோசித்தது. பூனையின் கண்கள் நெருப்புத் துண்டுகள் போன்று மின்னுகின்றன.
பெரியமியான் மிகவும் மோசமானது. வீட்டைவிட்டு வாசலுக்கு வருவதாக இருந்தால்கூட வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டுதான் வரும். அதன் வீட்டை, காகம் கண்ணம்மா பெருக்கும்போதுகூட பக்கத்திலேயே நிற்கும். கண்ணம்மா எதையாவது திருடிக்கொண்டு போய்விடுமோ என்ற பயம். இதைக் கேட்டால் அதன் வீட்டில் பெரும் செல்வம் இருக்கும் என்று தோன்றுகிறது அல்லவா... அப்படி எதுவும் இல்லை. அதுதான் வேடிக்கை. இரண்டு எலிகளின் உடலைக் கிழித்து வைத்திருக்கும். கேட்டால், உடல் அமைப்பைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லும். அது உண்மையல்ல, யாருக்கும் தெரியாமல் தின்பதற்காகத்தான் அது எலிகளைப் பிடித்து வைத்திருக்கிறது என்று கிராமத்துப் பிராணிகளெல்லாம் பேசிக்கொள்கின்றன. அது சரிதான் என்றே கண்ணம்மாவும் நினைக்கிறது.
(தொடரும்)
மலையாளம்: சுமங்களா
தமிழில்: யூமா வாசுகி
