தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நாவல் அரசி

நாவல் அரசி

நாவல் அரசி


PUBLISHED ON : அக் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலம்: 1901 - 1960

காந்தி சென்னை வந்திருந்தார் சென்னை நகர்முழுவதும் பரபரப்பாக இருந்தது. தேசிய உணர்வு கொண்ட பலரும் அண்ணலைக் காண வந்தார்கள்.

அவர்களில் ஒருவர், கோதைநாயகி, நல்ல எழுத்தாளர். காந்தியின் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர்.

சிறிதுநேரத்துக்குப் பிறகு, காந்தி அங்கு வந்தார். தன்னைக் காண வந்திருந்தவர்களை அன்போடு பார்த்தார்.

கோதைநாயகியைப் பார்த்ததும், காந்தி சிறு புன்னகை செய்தார். ''பாரத அன்னை விலங்குகளைப் பூண்டிருக்கிறார்; நீங்களோ பலவிதமான நகைகளைப் பூண்டிருக்கிறீர்கள்'' என்றார்.

அதைக் கேட்டதும், கோதைநாயகியின் மனம் மாறியது. அதுவரை பட்டுப்புடவை, அழகிய நகைகள் என்று தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்த அவர், கதர்ப்புடவை உடுத்தத் தொடங்கினார். மங்கல நாண் உள்ளிட்ட மிகச்சில அணிகலன்களை மட்டும் அணிந்துகொண்டு எளிய தோற்றத்துடன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

பெண்கள் படிப்பதே

அதிசயமாக இருந்த காலத்தில் வை.மு. கோதைநாயகி நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினார். எளிய மொழி, ஆழமான கருத்துகள், சீர்திருத்தச் சிந்தனைகள் ஆகியவற்றின் மூலம் ஏராளமான வாசகர்களைக் கவர்ந்தார்.

அன்றைய சமூகச்சூழலில் பெண்கள் வீட்டில் இருந்தபடி குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால், அவருடைய கணவர் வை.மு. பார்த்தசாரதி கோதைநாயகியை அவ்வாறு வீட்டுக்குள் முடக்கிவைக்க விரும்பவில்லை, அவரைக் கல்வி கற்குமாறு ஊக்குவித்தார். கோதைநாயகியும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்.

கோதைநாயகிக்கு இயல்பாகவே நன்கு கதைசொல்லும் திறமை இருந்தது. எழுதப் படிக்கக் கற்றுக்கொண்ட பிறகு, தனக்குத் தோன்றிய கதைகளை அவர் நாவல்களாக எழுதத் தொடங்கினார். நல்ல கதைமாந்தர்கள், சிறந்த சூழல் விவரிப்புகள், புதுமையான சிந்தனைகள், சுவையான நடை என அருமையாக அமைந்த அவருடைய நாவல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. அடுத்து, தன்னுடைய கதைகளை வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதற்காக 'ஜகன்மோகினி' என்ற இதழை வாங்கி நடத்தத் தொடங்கினார்.

ஆனால், ஒரு பெண் எழுதுவதும், பத்திரிகை நடத்துவதும் பலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் வை. மு. கோதைநாயகியின் படைப்புகளைப் புறக்கணிக்கவேண்டும் என்று பரப்புரை நடத்தினார்கள்.

நல்ல எழுத்தை இப்படியெல்லாம் பேசித் தடுத்து நிறுத்த இயலுமா? வை.மு. கோதைநாயகி நடத்திய 'ஜகன்மோகினி' இதழையும் அவருடைய நூல்களையும் வாசகர்கள் தொடர்ந்து வாங்கி ஆதரவளித்தார்கள்.

இன்று தமிழில் பெண் எழுத்தாளர்களுடைய நாவல்கள் பெருமளவில் வெளியாகின்றன; வாசகர்களால், விரும்பிப் படிக்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் தொடக்கத்தை அமைத்துத்தந்த சிறந்த எழுத்தாளர் வை. மு. கோதைநாயகி. ஆம். தமிழின் முதல் பெண் நாவலாசிரியர் இவர்தான்.

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us