PUBLISHED ON : டிச 25, 2017

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.
“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”
என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு என்பது என்னவென்றால், அவ்விருவரின் உறவுக்கும் உரிமைக்கும் எந்தக் குறையையும் ஏற்படுத்தாத, கீழே பற்றி இழுத்து வீழ்த்தாத நட்பு” என்பது அக்குறளின் பொருள். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழைமை எனப்படும். எளிமை, சிறுமை, பெருமை ஆகியன எளிய சிறிய பெரிய என்று ஆவதைப்போல பழைமை என்பது பழைய என்று ஆகும். ஆக, பழைமை என்பது வள்ளுவர் எடுத்தாண்ட அருஞ்சொல் என்பது விளங்கும்.
பழமை என்ற இன்னொரு சொல்லும் இருக்கிறது. அதற்கும் மேற்சொன்னவாறு மூத்தது, முதியது, பண்டையது என்னும் பொருட்கள்தாம். பழமொழி என்பது 'தொன்றுதொட்டு வழங்கப்படும் மொழி'. பழங்கஞ்சி என்றால், நேற்றைய கஞ்சி என்று பொருள். பழங்கதை, பழஞ்சோறு, பழஞ்சீலை, பழம்பெருமை, பழங்கோவில் என்று பழையதாகிப்போன எதனையும் பழமை என்ற சொல்லிலிருந்தே தருவிக்கிறோம். பழவேற்காடு என்ற ஊர்ப்பெயரும் இத்தகையதே. பழமையான வேல மரங்கள் நிறைந்திருக்கும் காடு பழவேற்காடு. முதிர்ச்சியடைந்த காயைத்தான் பழம் என்கிறோம். பேச்சுத் தமிழிலும் “பழமை பேசிட்டிருக்கிறோம்” என்பார்கள். பாட்டிமார்கள் இருவர் தாங்கள் வாழ்ந்த பழைய காலத்தைப் பற்றிப் பேசிக்கொள்வதை அவ்வாறு சொல்கிறோம். தங்களுடைய பழங்கதையைத்தான் பழமை என்கிறார்கள். ஆக, பழமை என்பதற்கு பேச்சுத் தமிழிலும் எழுத்திலும் நல்ல பயன்பாடு இருக்கிறது.
சொல்லின் பின்னொட்டு உயிர்மெய் எழுத்தில் தொடங்கினால், அங்கே பழமையை முன்னொட்டுவது எளிதாக அமைகிறது - பழ -மொழி, பழங் -கதை, பழஞ் -சோறு, பழஞ்- சீலை, பழம் -பெரும் சொல்லின் பின்னொட்டு உயிரெழுத்தில் தொடங்கினால் அங்கே பழைமை என்ற சொல்தான் நன்கு பயில்கிறது. பழையாறு (பழைமை +ஆறு). இந்த நுட்பத்தையும் கவனிக்க வேண்டும்.
பழைமை, பழமை இரண்டில் எது சரி என்று பார்த்தால், இரண்டும் சரியே. பழைமை என்பது துல்லியமான இலக்கிய வழக்கு. பழமை என்பதும் எழுத்திலும் பேச்சிலும் நன்கு பயின்ற வழக்கு. இரண்டும் உணர்த்துகின்ற பொருள் ஏறத்தாழ ஒன்றே. ஆயினும் பழமை என்பது மக்கள் தமிழில் நன்கு பயில்கிறது. பழைமை என்பது இலக்கணச் செப்பத்தோடு இருக்கிறது. உரிய பொருள் உணர்ந்து ஏற்றவிடங்களில் இவ்விரு சொற்களையும் பயன்படுத்த வேண்டும்.
- மகுடேசுவரன்
