தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஆட்சி, ஆவணம், காட்சி

ஆட்சி, ஆவணம், காட்சி

ஆட்சி, ஆவணம், காட்சி


PUBLISHED ON : டிச 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆனந்தனுக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது.

அது ஆனந்தனுக்குச் சொந்தம் என்று எப்படித் தெரியும்?

பல ஆண்டுகளாக ஆனந்தனின் குடும்பம்தான் அந்த நிலத்தை ஆண்டு அனுபவித்து வருகிறது. ஆகவே, அது ஆனந்தனின் நிலம்தான்.

இன்னொரு காரணம், பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்த நிலத்தை வைத்திருந்தவர் அதை ஆனந்தனின் குடும்பத்துக்கு எழுதிக்கொடுத்துவிட்டார். அந்த ஆவணமும் ஆனந்தனிடம் இருக்கிறது. மூன்றாவது காரணம், அவர் தன் நிலத்தை ஆனந்தன் குடும்பத்தினரிடம் விற்றபோது, நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களும், 'இந்த நிலம் ஆனந்தனுக்குத்தான் சொந்தம்' என்று சொல்கிறார்கள்.

ஆக, நாளைக்கே யாராவது ஆனந்தனிடம் வந்து 'இந்த நிலம் உன்னுடையதல்ல, என்னுடையது' என்று சண்டைபோட்டால், அவர் பதற்றப்படமாட்டார். இந்த மூன்று காரணங்களையும் காண்பித்து, அது தன் நிலம் தான் என்பதை நிரூபித்துவிடுவார்.

இதேபோல், வீடு, நகை, துணிமணிகள், வண்டி என்று ஒருவரிடம் எந்தச் சொத்து இருந்தாலும் சரி, அது அவருக்குத்தான் சொந்தம் என்று நிரூபிக்கிற விஷயங்கள் மூன்று:

ஆட்சி: அவர் இதனை ஆண்டு வருகிறார்.

ஆவணம்: அவருக்குத்தான் இது சொந்தம் என்று ஆவணத்தில் எழுதியிருக்கிறது

காட்சி: அவருக்குத்தான் இது சொந்தம் என்பதைப் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள்

இந்த மூன்றையும், பெரியபுராணத்தில் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் சேக்கிழார்:

'ஆட்சியில், ஆவணத்தில்,

அன்றி மற்று அயலார்தங்கள்

காட்சியில் மூன்றில் ஒன்று

காட்டுவாய்.'

இப்படி மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டாலும், சட்டத்தைப் பொறுத்தவரை 'ஆவண'த்துக்கு மதிப்பு அதிகம். எந்த வழக்கென்றாலும், 'இதை நிரூபிக்க உன்னிடம் என்ன ஆவணம் இருக்கிறது?' என்றுதான் கேட்பார்கள்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு கடைக்குச்சென்று ஒரு புத்தகம் வாங்குகிறீர்கள். அதற்குக் கடைக்காரர் ஒரு ரசீது அச்சிட்டுத் தருகிறார். பின்னர், நீங்கள் இன்னொரு கடைக்குச் செல்கிறீர்கள். அங்கே சிறிதுநேரம் சுற்றிப்பார்த்துவிட்டு எதையும் வாங்காமல் வெளியேறுகிறீர்கள். அப்போது, அந்த இரண்டாவது கடைக்காரர், உங்களைப் பிடித்துக்கொள்கிறார். 'தம்பி, உன் கையில் இருக்கும் புத்தகத்துக்குப் பணம் தரவில்லையே' என்கிறார்.

'இல்லைங்க, இது, நான் அந்தக் கடையில் வாங்கினது' என்று நீங்கள் மறுக்கிறீர்கள். 'அதுக்கு நான் அப்பவே பணம்கொடுத்துட்டேன்' என்று ரசீதைக் காட்டுகிறீர்கள். உடனே, இரண்டாவது கடைக்காரர், உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உங்களை அனுப்பிவைக்கிறார்.

இப்போது நீங்கள் அவரிடம் காட்டிய 'ரசீது' தான் ஆவணம். அந்தப் புத்தகத்தை நீங்கள் திருடவில்லை, காசுகொடுத்து வாங்கியிருக்கிறீர்கள் என்பதற்குச் சாட்சி. ஒருவேளை, முதல் கடைக்காரர் ரசீது தராவிட்டால்? அவர் தந்த ரசீதை நீங்கள் கிழித்துப்போட்டிருந்தால்? இரண்டாவது கடைக்காரர் உங்களை எப்படி நம்புவார்?

ஆகவே, ஆவணங்கள் மிக முக்கியமானவை. பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியவை.

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us