தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அசத்தலய்'யா'!

அசத்தலய்'யா'!

அசத்தலய்'யா'!


PUBLISHED ON : ஜூலை 31, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்ச் சொற்களில், 'யா' என்ற நெடில் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்குத் தனிச் சிறப்பு இருக்கிறது. யகர வரிசை எழுத்துகளில் (ய, யா, யி, யீ முதல் யௌ வரை), 'யா' என்ற நெடிலில் மட்டும் தான் தமிழ்ச்சொற்கள் தொடங்கும். பிற யகர எழுத்துகளில் தமிழ்ச்சொற்கள் தொடங்காது.

யந்திரம், யுகம், யூகம், யோசனை என்று பல சொற்கள் இருக்கின்றனவே, அவை யகர வரிசை எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டுள்ளனவே என்று தோன்றலாம். அவை யாவும் தமிழ்ச்சொற்கள் அல்ல. வடசொற்கள். யா என்ற நெடிலைத்தவிர பிற யகர எழுத்துகளில் தொடங்கினால், அவை தமிழ்ச்சொற்கள் அல்ல.

யகரத்தில், 'யா' என்ற நெடிலில் மட்டும் தான் தமிழ்ச்சொல் தொடங்கும். அவ்வாறு தொடங்கும் சொற்கள் யாவும் தமிழின் தனிச்சிறப்பான சொற்களாகவும் இருக்கின்றன. யானை, யாழ், யாவர், யாப்பு என்பன உடனே நினைவுக்கு வரும் சொற்கள்.

'யா' என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் பலவும், 'யா' எழுத்துக்கு மாற்றாக, 'ஆ' என்ற எழுத்தையும் பெறும். அதனால்தான், 'யா' என்ற எழுத்தில் தொடங்கும் பல சொற்களை நாம் அறியாமல் இருக்கிறோம்.

யானை என்ற சொல்லில், 'யா' என்னும் எழுத்துக்கு மாற்றாக, 'ஆ' வந்தால் யானை- - ஆனை ஆகும். யானையை ஆனை என்றும் சொல்கிறோம். ஒரே சொல்தான். அதன் ஓரெழுத்து மாறிக்கொள்கிறது. ஆனைமலை, ஆனைகட்டி, ஆனைமுடி என்றே இடப்பெயர்கள் விளங்குகின்றன.

'ஆறு' என்பது, இலக்கியத்தில் 'யாறு' என்று வழங்கப்படும். 'யாண்டு' என்ற சொல் தான், 'ஆண்டு' ஆகிறது. 'யாண்டு பலவாக நரையில ஆகுதல்' என்பது பிசிராந்தையார் கூறும் சங்க இலக்கியம் (புறநானூறு).

'யாயும் ஞாயும் யாராகியரோ' என்பது குறுந்தொகைப் பாடல். 'யாய்' என்பதுதான், 'ஆய்' ஆகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால், 'எதுவும் ஊரே எவராயினும் உறவினரே' என்று பொருள். வினாச்சொற்கள் பலவும் 'யா' என்பதை முதல் வடிவமாகக் கொண்டவை. யாது, யாவர், யார், யாவை.

தன்னைக் குறிக்கின்ற பொருளில், ஒருமை பன்மையில் வருகிற 'யான்,' 'யாம்' என்பவைதாம், 'என்', 'எம்' என்றும் மாறுகின்றன.

'யா' என்ற எழுத்துக்கும் அவ்வெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கும் இவ்வளவு சிறப்புகள் உள்ளன.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us