
சுட்டெரிக்கும் பாலை நிலத்தில் வளர்ந்தாலும் குருத்து விடத் தொடங்கியது முதல், பட்டுப்போன பிறகும் பயன்படுவது பனை. இதனாலேயே கேட்டதெல்லாம் தரும் 'கற்பகத்தரு' என்று போற்றப்படுகிறது. இந்தியாவில் 8.59 கோடி பனை மரங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் முக்கால்வாசி மரங்கள், துல்லியமாகச் சொல்வதென்றால், 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. தமிழகத்தின் 'மாநில மரம்' என்ற சிறப்பு பனைக்குத்தான்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. நம் ஊரில் காணப்படும் பனையின் தாவரவியல் பெயர் பொராஸஸ் ஃப்ளபெல்லிஃபெர் (Borassus flabellifer). இது 30 மீ. உயரம் வரை வளரும்.
பனை இலைகள் விசிறி வடிவில் இருக்கும். மரத்தின் உச்சியில் 25 முதல் 45 இலைகள்வரை கொத்தாக வளரும். மிகவும் நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பைப் பெற்றிருப்பதால், மண்ணை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு மண் அரிப்பைத் தடுக்கும்.
பனையின் தண்டுப் பகுதி பாறையைப் போல உறுதியாக இருக்கும். இரண்டாகப் பிளக்கப்பட்ட தண்டுக்கு பனங்கை, பனம் வரிச்சல் என்று பெயர். இது உத்தரங்களையும் வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலங்களையும் செய்யப் பயன்படுகிறது.
பனையில் ஆண், பெண் என இரு வகை உண்டு. பெண் பனையைப் 'பருவப் பனை' என்றும், ஆண் பனையை 'அலகுப் பனை' என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஆண் பனை பூக்கும், ஆனால் காய்க்காது. அயல் மகரந்தச் சேர்க்கை நடந்த பின்பு, பெண் பனை குலைகளாகக் காய்க்கும்.
ஒரு குலையில் 40 முதல் 50 காய்கள்வரை இருக்கும். இளம் காய்களைத்தான் 'நுங்கு' என்று சொல்கிறோம். முற்றிய காய்களில் விதைகளைச் சுற்றிலும் நீண்ட தும்புகள் இருக்கும். தும்புகளிடையே செம்மஞ்சள் நிறத்தில் கசப்பும் இனிப்பும் கலந்த களி போன்ற பொருள் இருக்கும். நெருப்பில் சுட்டு பழத்தின் தோலை உரித்து, பின் களியைப் பிழிந்து உண்பது வழக்கம்.
பனையின் பூம்பாளை (Inflorescence) நுனியை சீவிவிட்டால், பதநீர் சொட்டும். சுண்ணாம்பு தடவிய கலயத்தைக் கட்டி, பதநீர் சேகரிப்பார்கள். சுண்ணாம்பு தடவாமல் விட்டால், புளித்து, கள் ஆகிவிடும். ஆண் பனை, பெண் பனை இரண்டில் இருந்தும் பதநீர் எடுக்கலாம். பெண் பனையில் பதநீர் எடுத்தால் காய் காய்க்காது.
பதநீரைக் காய்ச்சி, பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பனை ஓலைகளையும், பனை மட்டையில் இருந்து பிரிக்கும் நார்களையும் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன. இவற்றில் எதுவுமே சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காது என்பது சிறப்பு.