தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வலி மிகுதல் -34 - உடன்தொக்க தொகைகளில் வலி மிகுமா?

வலி மிகுதல் -34 - உடன்தொக்க தொகைகளில் வலி மிகுமா?

வலி மிகுதல் -34 - உடன்தொக்க தொகைகளில் வலி மிகுமா?


PUBLISHED ON : செப் 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைத் தொகைகளை அறிவோம். வேற்றுமை உருபுகள் மறைந்து வருபவை வேற்றுமைத் தொகைகள். வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லும் மறைந்து வருவது உண்டு. வினைச்சொல்லைப் பயனிலை என்று இலக்கணத்தில் வழங்குவார்கள். வேற்றுமை உருபும் ஒரு பயனிலையும் மறைந்து வருவது 'வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை' என்று, கூறப்படும். இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமை உருபுகள் 'ஐ,ஆல்,கு,இன்,அது,கண்' என அறிவோம்.

தண்ணீரைப் பிடி என்பது இரண்டாம் வேற்றுமைத் தொடர். இங்கே 'தண்ணீர்+ஐ பிடி' என்று இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பட்டுத் தோன்றியது. 'தண்ணீர் பிடி'என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. இங்கே இரண்டு சொற்களுக்கிடையே இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து நின்றது. உடன்தொக்க தொகையில் வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்துக் கருதினால்தான், பொருள் முழுமை பெறும்.

தண்ணீர்க் குடம் - இதனை எவ்வாறு விரித்துப் பொருள் கொள்வது? 'தண்ணீரைக் குடம்' என்று விரித்தால் பொருள் கிடைக்கவில்லை. 'தண்ணீரைப் பிடிக்கும் குடம்' என்று விரித்துப் பொருள்கொள்ள வேண்டும். ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபோடு 'பிடித்தல்' என்ற வினையும் உடன் வந்தால்தான் பொருள் நிறைவு பெறுகிறது. இங்கே ஐ என்ற வேற்றுமை உருபும் பிடித்தல் என்ற பயனிலையும் மறைந்து நின்றன. இதுதான் 'இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை' ஆகும்.

'வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்' அனைத்திற்கும் கட்டாயம் வலி மிகும். தண்ணீர்க் குடம் - தண்ணீரைப் பிடிக்கும் குடம் என்ற பொருளுணர்த்துகிறது. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, அதனால், வலி மிகுந்தது.

பித்தளைக் குடம் - பித்தளையால் செய்த குடம் என்ற பொருளை உணர்த்துகிறது. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. வலி மிகுந்தது.

குழந்தைப் பால் - குழந்தைக்கு ஊட்டும் பால் என்ற பொருளை உணர்த்துகிறது. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. வலி மிகுந்தது.

பழச்சாறு - பழத்திலிருந்து பிழியும் சாறு என்ற பொருளை உணர்த்துகிறது. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. வலி மிகுந்தது.

ஆறாம் வேற்றுமைக்கு உடன்தொக்க தொகை இல்லை. மதுரைக் கோவில் - மதுரைக்கண் அமைந்த கோவில். ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. வலி மிகுந்தது.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us