தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/யார் யார் தந்தையர்?

யார் யார் தந்தையர்?

யார் யார் தந்தையர்?


PUBLISHED ON : செப் 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெற்றெடுத்த தந்தையை மட்டும் தந்தையாகக் கொள்ள வேண்டியதில்லை. தந்தை என்கிற பேரிடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் என்று மேலும் சிலர் இருக்கிறார்கள். பிறப்புக்குக் காரணமானவர் என்ற வகையில், தந்தையாக ஓர் உறவினைக் கொண்டிருக்கிறோம். அவரே நம் அனைத்துத் தேவைகளையும் தீர்த்து வைக்கிறார். நம்மை வளர்த்து ஆளாக்குவது என்னும் நீண்ட கடமையில் அவர் மட்டுமே பங்கெடுப்பதில்லை. அவருடைய நிலையிலிருந்து இன்னும் பலர் நமக்கு வேண்டியதைச் செய்து தருகிறார்கள். அவர்களையும் தந்தையைப் போன்றே கருத வேண்டும் என்று ஒரு தமிழ்ச்செய்யுள் கூறுகிறது. யார் யாரைத் தந்தையாகக் கொள்ள வேண்டும்?

'பிறப்பித்தோன் வித்தைகளைப் பேணிக் கொடுத்தோன்

சிறப்பின் உபதேசம் செய்தோன் - அறப்பெரிய

பஞ்சத்தில் அன்னம் பகிர்ந்தோன் பயந்தீர்த்தோன்

எஞ்சாப் பிதாக்களென எண்'.

பிறப்பித்தோன் - நம் பிறப்புக்குக் காரணமானவர்.

வித்தைகளைப் பேணிக் கொடுத்தோன் - நாம் கற்க வேண்டிய கல்வியை முறையாகக் கற்றுக்கொடுத்து, நாம் கற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியவர்.

சிறப்பின் உபதேசம் செய்தோன் - இவ்வுலகத்தின் அரிய உண்மைகளை எவ்விதக் கைம்மாறும் கருதாமல், விளக்கமாக நமக்குக் கூறியவர்.

அறப்பெரிய பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் - எல்லாம் அற்றுப் போய்விடுமாறு வந்துவிட்ட பெரும் வறுமைக் காலத்தில், உண்பதற்கு உணவு கொடுத்தவர்.

பயம் தீர்த்தோன் - வாழ்க்கையில் நமக்கு எதன் மீது வேண்டுமானாலும் அச்சம் தோன்றிவிடும். அந்த அச்சமே நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். ஆனால், அந்த அச்சத்தை வென்று நடந்தால், அடைய வேண்டியவற்றை அடையலாம். அத்தகைய சூழ்நிலையில் நம்முடைய அச்சத்தைத் தீர்த்து வைத்தவர்.

எஞ்சாப் பிதாக்கள் என எண் - அவர்கள் யாருமே தந்தை என்ற உயரிடத்திலிருந்து சிறிதும் தகுதிக் குறைவில்லாதவர்கள், தந்தைகள் என்றே நினைப்பாயாக.

- தமிழ்மலை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us