தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வலிமிகும் இடங்கள் - யானை படையா? யானைப் படையா?

வலிமிகும் இடங்கள் - யானை படையா? யானைப் படையா?

வலிமிகும் இடங்கள் - யானை படையா? யானைப் படையா?


PUBLISHED ON : அக் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாதத்தைத் 'திங்கள்' என்று சொல்கிறோம். ஆண்டுக்குப் பன்னிரண்டு திங்கள்கள். அந்தப் பன்னிரண்டு திங்கள்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி… என்று தொடங்கி பங்குனி வரை அவை பெயரிடப்பட்டிருக்கின்றன. திங்கள் என்பது மாதம். ஆடி என்பது திங்களில் ஒன்று. எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு பெயரும் (திங்கள்) அவற்றின் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரும் (சித்திரை, வைகாசி… என) வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒன்றின் பொதுவான பெயர் பொதுப்பெயர். பொதுப்பெயரின் கீழ்வரும் உறுப்புகளுக்கு வழங்கப்படும் பெயர் சிறப்புப் பெயர். திங்கள் என்பது பொதுப்பெயர். சித்திரை, வைகாசி என்று தொடங்கும் பன்னிரண்டும் சிறப்புப் பெயர்கள். தைத்திங்களில் பொங்கல் வரும். ஆடித்திங்களில் தள்ளுபடி விற்பனை நடைபெறும். ஐப்பசித் திங்களில் அடைமழை பெய்யும். மார்கழித் திங்களில் மதிமிகுந்த நன்னாள்.

செடி என்பது பொதுவான பெயர். எல்லா வகையான செடிகளையும் செடி என்று சொல்லிவிடலாம். “வீட்டு முன்னாடி செடி வெச்சதனால பார்க்க அழகா இருக்குது” என்று சொல்கிறோம். செடி என்று ஒன்றைக் குறிப்பிடுவதே போதுமா? இன்ன செடி என்றும் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. பூச்செடி, மல்லிகைச்செடி, மூலிகைச்செடி, வெண்டைச்செடி, எள்ளுச்செடி, எருக்கஞ்செடி.

ஒரு பொதுப்பெயரின் முன்னால் சிறப்புப் பெயரைச் சேர்த்துச் சொல்வதன் வழியாக அந்தப் பொருள் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு பொருளுக்குரிய இரண்டு பெயர்கள் தோன்றி நடுவில் 'ஆகிய' என்ற பண்புருபு மறைந்துவருவதுதான் அப்பெயர்த்தொடர்களின் விளக்கம். இவ்வாறு பொதுப்பெயரும் சிறப்பு பெயரும் ஒட்டிக்கொண்டு வரும்போது இடையில் 'ஆகிய' என்ற சொல்லும் மறைந்திருக்கும். இலக்கணத்தில் மறைந்து வருவதைத் தொகுபட்டுவிடுகிறது என்பார்கள்.

சித்திரை ஆகிய திங்கள் - சித்திரைத் திங்கள்

ஆடி ஆகிய திங்கள் - ஆடித் திங்கள்

மல்லிகை ஆகிய செடி - மல்லிகைச் செடி

வெண்டை ஆகிய செடி - வெண்டைச் செடி

மாமரம், வாழைமரம், தைத்திங்கள், மார்கழித் திங்கள், பூச்செடி, மல்லிகைச் செடி என்று வரும்போது அவற்றின் பண்பு தெரிகிறது. அதனால் அவற்றை 'இருபெயரொட்டுப் பண்புத்தொகை' என்பார்கள்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்குக் கட்டாயம் வலிமிகும். இரண்டு பெயர்கள் வந்து முன்னது சிறப்புப்பெயராகவும் பின்னுள்ளது பொதுப்பெயராகவும் இருந்தால் அங்கே வலிமிகும்.

படை பொதுப்பெயர். யானைப் படை என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வலிமிகுந்தது.

பூ பொதுப்பெயர். அரளிப் பூ என்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகை. வலிமிகுந்தது.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us