தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தொல்காப்பியர் சொல்லும் ஆறு அறிவுகள்

தொல்காப்பியர் சொல்லும் ஆறு அறிவுகள்

தொல்காப்பியர் சொல்லும் ஆறு அறிவுகள்


PUBLISHED ON : அக் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவரங்களுக்கு அறிவுண்டா?

இந்தக் கேள்வியைக் கேட்டதும் பலர் வாய்விட்டுச் சிரிப்பார்கள். 'இல்லவே இல்லை' என்பார்கள். 'வாழைமரமும் மாமரமும் புத்தகம் படித்துத் தேர்வெழுதி மதிப்பெண் வாங்குகின்றனவா? தாமரைமலரும் நெற்கதிர்களும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதில்லையே? அப்படியானால், அவற்றுக்கு அறிவு இல்லை என்றுதானே பொருள்?'

'அறிவு' என்பது புத்தகம் படிப்பதும் மதிப்பெண் வாங்குவதும் வேலைக்குச் செல்வதும்தான் என்றில்லை. குளிர் அதிகமாக இருக்கும்போது வெளியில் அதிகம் நடமாடாமல் உள்ளேயே இருக்கவேண்டும். வெய்யில் அதிகமாக இருக்கும்போது நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதெல்லாம்கூட அறிவுதான். இது மிருகங்கள், பறவைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கிறதே!

ஆக, 'அறிவு' என்பது பலவகைப்படும். அந்த வரையறையின்படி பார்த்தால், தாவரங்களுக்கும் ஓர் அறிவு உண்டு. பிறர் தன்னைத் தொடுகிறார்கள் என்பதை உணரும் அறிவுதான் அது. தமிழில் இதனை 'உற்றறிதல்' என்பார்கள். இந்த ஒரே அறிவுமட்டும் கொண்ட தாவரங்களை 'ஓரறிவுயிர்கள்' என்று அழைப்பார்கள்.

நத்தை, சங்கு, சிப்பி ஆகியவற்றுக்கு உற்றறிகிற அறிவு உண்டு. அத்துடன், தன்னுடைய உணவை நாக்கினால் சுவைத்து அறிகிற இன்னோர் அறிவும் இருக்கிறது. ஆகவே, இவற்றை 'ஈரறிவுயிர்கள்' என்பார்கள்.

எறும்புகளுக்கு இந்த இரு அறிவுகளும் உள்ளன. மூன்றாவதாக, உணவை மூக்கினால் மோப்பம் பிடிக்கிற இன்னோர் அறிவும் இருக்கிறது. ஆகவே, இவற்றை 'மூவறிவுயிர்கள்' என்பார்கள்.

நண்டு, தும்பி ஆகியவற்றுக்கு இந்த மூன்று அறிவுகளும் உள்ளன. நான்காவதாக, தங்களைச் சுற்றியுள்ளவற்றைக் கண்ணால் காண்கிற இன்னோர் அறிவும் இருக்கிறது. ஆகவே, இவற்றை 'நான்கறிவுயிர்கள்' என்பார்கள்.

நாய், ஆடு, மாடு போன்றவற்றுக்கு இந்த நான்கு அறிவுகளும் உள்ளன. ஐந்தாவதாக, தங்களைச் சுற்றி எழும் ஓசைகளைக் காதால் கேட்கிற இன்னோர் அறிவும் இருக்கிறது. ஆகவே, இவற்றை 'ஐந்தறிவுயிர்கள்' என்பார்கள்.

நிறைவாக, மனிதனுக்கு இந்த ஐந்து அறிவுகளும் உள்ளன. ஆறாவதாகச் சிந்திக்கிற, இது சரி, இது தவறு என்று பகுத்தறிகிற இன்னோர் அறிவும் இருக்கிறது. ஆகவே, மனிதனை 'ஆறறிவுயிர்' என்கிறோம். இதுதான் மனிதனை மற்ற அனைத்து உயிரினங்களிலிருந்தும் உயர்த்துகிறது. பிற உயிர்களையெல்லாம் அவன் ஆள்வது இதனால்தான்.

அதேசமயம், முதல் ஐந்து அறிவுகளும் குறைவானவை என்று பொருளில்லை. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதத்தில் நம்முடைய இயக்கத்துக்கு உதவுகின்றன. இனிமையான, பயனுள்ள வாழ்க்கைக்குத் துணைபுரிகின்றன.

ஆக, உற்றறிதல் முதல் அறிவு, அத்துடன் நாக்கு/சுவையுணர்தல் சேரும்போது ஈரறிவு. அத்துடன் மூக்கு/மோப்பம் சேரும்போது மூவறிவு. அத்துடன் கண்/பார்த்தல் சேரும்போது நான்கறிவு. அத்துடன் காது/கேட்டல் சேரும்போது ஐந்தறிவு. அத்துடன் மனம்/சிந்தித்தல், பகுத்தறிதல் சேரும்போது ஆறறிவு.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்தான் உயிரினங்களை இப்படி வகைப்படுத்திக் கூறியிருக்கிறார். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலுள்ள மரபியல் பகுதியில் இந்த நூற்பா இடம்பெற்றுள்ளது:

'ஒன்றறிவு அதுவே, உற்று அறிவதுவே,

இரண்டறிவு அதுவே, அதனொடு நாக்கே,

மூன்றறிவு அதுவே, அவற்றொடு மூக்கே,

நான்கறிவு அதுவே, அவற்றொடு கண்ணே,

ஐந்தறிவு அதுவே, அவற்றொடு செவியே,

ஆறறிவு அதுவே, அவற்றொடு மனனே,

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.'

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us