தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எழுத்துக்களின் பிக்னிக்

எழுத்துக்களின் பிக்னிக்

எழுத்துக்களின் பிக்னிக்


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தின் உள்ளே நிறைய எழுத்துகள் இருந்தன.

ஒரு நாள் அந்த எழுத்துகளில் சிலவற்றிற்கு ஓர் ஆசை வந்தது. “நாமெல்லாம் ஒரு நாள் வெளியே போய்விட்டு வந்தால் என்ன?”

திட்டம் உருவாயிற்று.

“யார் யாரெல்லாம் வெளியே வருகிறீர்கள்?”

அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுத்துகள் கை உயர்த்தின.

“அந்த 'ர', கையை வளைத்துத் தூக்குவதைப் பாரேன்… 'ரி' மாதிரி இருக்கிறது.”

“ஏய்… இப்போது என்ன கிண்டல்? முதலில் புத்தகத்தில் இருந்து வெளியே போவோம்.”

எழுத்துகள், ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்தன.

“பாரேன்… 'அ' தான் முதலில் இறங்கியிருக்கிறது!”

“ஹாஹாஹா… அப்படி என்றால் கடைசியாக இறங்கப்போவது யார், ன்-னா?” கேட்டுக்கொண்டே மை இறங்கியது.

புத்தகத்தில் இருந்து வெளியே இறங்கிய எழுத்துகள், ஒரு பக்கமாகக் கூடி நின்றன. “இன்னும் யாரெல்லாம் வருகிறார்கள் என்று கொஞ்சம் காத்திருக்கலாம்…”

அப்போது ஒரு மெல்லிய வாசம் காற்றில் தவழ்ந்தது. “பூ வருகிறது என்று நினைக்கிறேன்.”

“பூவின் கூடவே யார் வருவார் என்று எனக்கு ஒரு யூகம் இருக்கிறது” என்றது அ.

“தெரியுமே… ஈ யைச் சொல்வாய்” - இப்படிச் சொன்னது மை.

அந்த இரண்டு எழுத்துகளும் எதிர்பார்த்தபடி, பூவைத் தொடர்ந்து ஈதான் இறங்கியது!

இப்படி, பல எழுத்துகள் வந்து, தங்கள் தங்கள் நண்பர்களோடு சேர்ந்து நின்றன.

உருவத்தில் பெரிதாக இருந்த ணௌ தான் இந்தத் திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தது.

“சொல்லுங்கள், இப்போது நாம் என்ன செய்யலாம்?” என்றது ணௌ.

“எங்காவது வெளியில் சென்று வரலாம்”

“ஆஹா… தொலைவாகப் போய்விட்டால், சரியாகத் திரும்பிவிட முடியுமா?”

“நம்மிடம்தான் வவும் ழியும் உண்டே, பிறகென்ன?”

“பாதுகாப்பாக இங்கேயே இருந்து ஏதேனும் விளையாடலாம்.”

“வெளியே போக வேண்டும் என்றாலும் சரி, இங்கேயே விளையாடுவது என்றாலும் சரி, முதலில் நாம் எல்லாம் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொள்வோம். அதுதான் பாதுகாப்பு.”

“அட, நல்ல யோசனை!”

“வலியவர்கள், மென்மையானவர்கள், இடைப்பட்ட வகையினர் என்று குழுச் சேரலாமா?”

“ம்ஹூம்… அது குழுவாக இருக்காது; கூட்டம் ஆகிவிடும்…”

“அப்படியானால் ஒரு மெய்யெழுத்தும் அதன் உயிர்மெய் வரிசையுமாகக் கூடுவோம்.”

பேசியபடியே எழுத்துகள் சிறு சிறு குழுவாகப் பிரிந்து நின்றன.

“ஏய்… அங்கே பார்!” என்று கத்தியது ணௌ. அதன் குரலில் நிறைய ஆச்சரியம்.

ணௌ சுட்டிக் காட்டிய இடத்தில் தகர வரிசை எழுத்துகளான தா, தி, தீ, து, தூ, தோ ஆகிய எழுத்துகள் நின்றிருந்தன. ஆனால் வரிசை கொஞ்சம் மாறி இருந்தது.

“அந்த எழுத்துகளின் குழுவை மொத்தமாகப் பாருங்களேன்… 'தாதி தூதோ தீது' என்று தெரிகிறது!” என்று மை வியந்தது.

“நாங்களாக அப்படி நிற்கவில்லை. புத்தகத்தை எழுதியவர், ஒரு தனிப்பாடலை மேற்கோள் காட்டி இருக்கிறார். அதில் வரும் வரியில் இருந்துதான் நாங்கள் இங்கே வந்தோம்” என்றது குழுவில் இருந்த தோ.

அப்போது 'ஞமஞம' என்று ஒரு முணுமுணுப்பு சத்தம் கேட்டது. எழுத்துகள் திரும்பிப் பார்த்தன.

அங்கே நின்றிருந்தது ஞ் வரிசைக் குழு.

குழு என்றுதான் பெயரே தவிர, அதில் இரண்டே எழுத்துகள்தான் இருந்தன. ஞா, ஞெ.

“புத்தகம் முழுவதிலும் எங்கள் வரிசையில் நாங்கள் ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கிறோம்” என்று வருத்தத்தோடு உதட்டைப் பிதுக்கியது ஞெ.

“பரவாயில்லை. ஞாயிறு என்று ஓர் இடத்திலும் ஞெகிழிப் பை என்று இன்னோர் இடத்திலும் நூலாசிரியர் எழுதியிருக்கிறார். அவரே இன்னும் தமிழ் ஆர்வலராக இருந்திருந்தால், நாயைக் குறிக்கும் ஞமலி, மயிலின் இன்னொரு பெயரான மஞ்ஞை ஆகியவற்றைக் குறிப்பிட்டிருப்பார்…” என்று நீளமாகப் பேசியது அ.

குறுக்கிட்டது பூ, “இதற்காக வருத்தப்படாதீர்கள். உங்களைவிட பலவீனமானவர்களும் உண்டு. சுற்றிப் பாருங்கள்… ங் வந்திருந்தால் என்ன கதி ஆகி இருக்கும்? அது மட்டும் ஒற்றையாக நின்று அவமானப்பட்டிருக்கும். அதற்கு நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை” என்று ஆறுதல் சொன்னது.

அந்த நேரத்தில் எழுத்துகள் எல்லாம் ஓர் உடன்பாட்டுக்கு வந்தன. “நாம் நம் இஷ்டப்படி யாரும் யாருடனும் சேர்ந்து நிற்போம்.”

அப்படியே மூன்று மூன்று எழுத்துகளாகச் சேர்ந்தன.

முதல் எழுத்தான 'அ'வும் கடைசி எழுத்தான 'ன்'னும் அவற்றோடு 'பு'வும் ஒரு குழு.

“அ, ன், பு… ஆகா உங்கள் குழுதான் உலகத்தையே ஆளும் வல்லமை படைத்தது” என்று மகிழ்ச்சியோடு சொன்னது நா.

அடுத்து -

அ, றி, வு.. “உங்களை அப்படியே அள்ளி எனக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் போல இருக்கிறது” என்று கூவியது பை.

பக்கத்திலேயே,

வெ, ற், றி…

“ஆஹா… எல்லோரும் விரும்பும் குழு நீங்களாகத்தான் இருப்பீர்கள்” என்றது கோ.

அப்போது எழுத்துக் கூட்டத்தின் வெவ்வேறு மூலைகளில் இருந்து மூன்று எழுத்துகள் ஒன்றை ஒன்று தேடிக் கண்டுபிடித்து, கைகளைக் கோத்துக்கொண்டன.

டி, மு, வு ஆகிய எழுத்துகள்…

“ஏய், என்ன செய்கிறீர்கள்…”

“இப்போது பாருங்கள்” என்று அந்த எழுத்துகள் இடம் மாறி நின்றன.

மு, டி, வு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us