PUBLISHED ON : மே 02, 2016

ஜான் ஹென்றி டூனான் பிறந்த தினம் மே 8
ஜான் ஹென்றி டூனான் பிறப்பு: மே 8, 1828. ஜெனிவா
பெற்றோர்: ஜான் ஜேக்ஸ் டூனான் (Jean Jacques Dunant),
அந்தோய்னியே டுனான் கொலாடான் (Antoinette Dunant Colladon)
போர் என்றாலே ஆயிரக்கணக்கானோர் காயம்படுவார்கள். இறந்துபோவார்கள். அப்படிப்பட்ட போரின் மத்தியிலும் பரிவு அவசியம், காயம்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடியவர், ஜான் ஹென்றி டூனான் (Jean Henry Dunant). ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்தவர்.
தனது 31வது வயதில், ஒரு வணிக முயற்சிக்கு உதவி கோரி பிரான்ஸ் அரசர் நெப்போலியனைச் சந்திக்கத் திட்டமிட்டார், டூனான். அது யுத்தக் காலம். ஆஸ்திரியா மீது போரிட, இத்தாலியில் சல்ஃபரினோ (Solferino) என்ற இடத்தில் முகாமிட்டு இருந்தார் நெப்போலியன்.
மன்னரைப் பார்க்க சல்ஃபரினோ சென்ற டூனானுக்கு போர்களத்தைக் காண நேரிட்டது.பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் காயம்பட்டு சரிவதைக் கண்டார். அடிபட்ட இரு தரப்பினரையும் காப்பாற்ற எண்ணினார்.
போர் முடிவுக்கு வந்ததும், அதிகாரிகள், காயம்பட்டவர்களைப் பக்கத்தில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பினார்கள். போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லாததால், அடிபட்ட வீரர்களை அதிகம் காப்பாற்ற முடியவில்லை.
டூனான், அக்கம்பக்க ஊர்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து, மனிதாபிமானத்துடன் வீரர்களுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விளக்கினார். மக்கள் உதவி செய்ய முன்வந்தார்கள். மாதா கோவில், மைதானம், நாற்சந்தி என சகல இடங்களும் தற்காலிக மருத்துவமனைகளாக மாறின. பாரபட்சம் பார்க்காமல் இருதரப்பு வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்க மக்களை உற்சாகப்படுத்தினார் டூனான்.
ஊர் திரும்பியதும், தனது அனுபவங்களை 'சல்ஃபரினோ நினைவுகள்'என்று ஒரு நூலாக எழுதி வெளியிட்டார். யுத்த காலத்தில் எந்தப் பேதமும் பார்க்காமல், எல்லா தரப்பினருக்கும் மருத்துவ சேவை செய்யும் சுதந்திர அமைப்பு வேண்டும் என்று அவர் அந்த நூலில் குறிப்பிட்டு இருந்தார்.
ஜெனிவா பொதுநலச் சங்கத்தின் தலைவராக இருந்த குஸ்தாவ் மொய்நியே என்பவர் (Gustave Moynier) அந்த நூலைப் படித்தார். ஜெனிவா சங்கத்தில் டூனானின் பரிந்துரைகள் குறித்து விவாதித்தார். இதன் விளைவாக டூனான், மொய்நியே உள்ளிட்ட ஐந்து நபர் குழு ஒன்று தொடங்கப்பட்டது. இந்தக் குழுவின் தொடர்ச்சியான செயல்பாடுகளால், உருவானதுதான் சர்வதேசச் செஞ்சிலுவை, செம்பிறை சங்கம். (International Federation of Red Cross & Red Crescent - IFRC)
இன்றைக்கு 189 நாடுகளில், 10 கோடி உறுப்பினர்களையும் உள்ளடக்கி உலகின் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சங்கம் சேவை செய்கிறது.
