PUBLISHED ON : மார் 12, 2018

அந்தச் சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். வீட்டில் அப்பா இல்லை. அம்மாவும் அவர் அண்ணனும் என மூன்று பேர் மட்டுமே. குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. உணவுக்குக்கூட வழியில்லை. சிலர் அந்தத் தாயிடம் 'உன் இருபிள்ளைகளையும் நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டால் வறுமையைச் சமாளிக்கலாம்' என்று அறிவுரை கூறினர்.
பிள்ளைகளின் படிப்பு கெடுவதற்கு அந்தத் தாய்க்கு மனம் இல்லை. முதலில் மறுத்தார். ஆனால் படிப்பை விடவும் உயிர்வாழ உணவு தேவை என்பதை உணர்ந்து, தன் இரண்டு பிள்ளைகளையும் நாடகக்குழுவிற்கு நடிக்க அனுப்பினார்.
பிள்ளைகளின் வருமானத்தில் குடும்பம் நடந்தது.
அந்தப் பிள்ளைகள் திரைத் துறையில் சேர்ந்து படிப்படியாக வளர்ந்தார்கள்.
அந்த இருவரில் தம்பிக்கு மக்கள் மத்தியில் பேரும் புகழும் கிடைத்தது.
பின்னாளில் அவர் அரசியலுக்கு வந்தார். தமிழகத்தின் முதல்வராகவும் ஆனார். அவர் பெயர் எம்.ஜி. இராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். அவர் அண்ணன் சக்கரபாணி.
தன்னுடைய சிறு வயதில் புழுக்கள் நெளியும் உணவை உண்டவர் எம்.ஜி.ஆர்.
''காமராஜர் எனது தலைவர், அண்ணா எனது வழிகாட்டி” என்று கூறியவர்.
காமராசர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்தது.
தனது தலைவரான காமராசரின் திட்டத்தை விரிவுபடுத்தி 'சத்துணவுத் திட்டமாக்கினார்' எம்.ஜி.ஆர்.
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தார்.
காமராசர், எம்.ஜி.ஆர். இருவருமே பள்ளிக் கல்வியை முடிக்காதவர்கள்.
ஆனால், இருவருமே பின்னாளில் நிறையப் படித்து தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டார்கள்.
கல்விக்கு வறுமை ஒரு பொருட்டே அல்ல. கற்கவேண்டும் என்ற முனைப்பு மட்டும் இருந்தால்போதும். அது, நம்மை மேதைகளாக்கும்.

