PUBLISHED ON : ஏப் 25, 2016

மழையோ, வெயிலோ எதுவாக இருந்தாலும் நம்மைப் பாதுகாக்கும் குடை (Umbrella) பழம்பெருமை கொண்டது. அந்தக் காலத்தில் அரசர்களின் அடையாளமாக வெண்கொற்றக் குடைகள் இருந்தன. இந்தியர்களும் சீனர்களும் பண்டைக் காலத்திலேயே குடைகளைப் பயன்படுத்தி இருக்கின்றனர்! கம்பிகள் அடங்கிய தொகுப்பின் மீது போர்த்தப்பட்ட துணியுடன் கைப்பிடி கொண்டதாக இருக்கும்.
குடைகள் விதவிதமான வடிவத்திலும் வண்ணத்திலும் இருக்கின்றன. இவை எல்லாம் வடிவமைப்பில் வந்த மாற்றமே. அந்த வரிசையில் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள 'காற்றுக்குடை' (Airbrella) டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப நவீனத் தொழில்நுட்பத்துடன் புதுமையாக இருக்கிறது. இதை, குடை என்று சொன்னால் குடையே நம்பாது!
இந்தக் குடையில் வெறும் கைப்பிடி மட்டும்தான் உள்ளது. கைப்பிடி எப்படி மழையில் இருந்து பாதுகாக்கும்?
இதன் உட்புறத்தில் ஒரு மோட்டார் மற்றும் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்தில் ஒரு பொத்தான் உள்ளது. அதை அழுத்தியதும், சுற்றுப்புறக் காற்றை மோட்டார் உள் இழுத்து பின்பு அந்தக் காற்றை வேகமாக உந்தி வெளியே தள்ளுகிறது. அப்போது வரும் காற்று, மழைத் துளிகள் நம் மீது விழாதபடி சிதறியடிக்கும்.
காற்றின் வேகத்தையும் குடையின் உயரத்தையும் சரி செய்யும் வசதி இந்தக் குடையில் உள்ளது. நம்முடைய கையும் வலிக்காது. பலத்த காற்று வீசும்போது குடையும் கிழியாது!
“எல்லா இடங்களிலும் காற்று இருக்கிறது. காற்றின் வேகத்தைப் பொறுத்துதான் ஆற்றல் உருவாகும். அப்படிப்பட்ட காற்றை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்” என்கின்றனர் காற்றுக் குடையை உருவாக்கிய பொறியாளர்கள்.
