PUBLISHED ON : ஜூன் 26, 2023

டெர்மடோபைட்டுகள் (Dermatophytes) மனிதத் தோலில் நோய்த்தொற்று ஏற்படுத்தும் பூஞ்சைகளாகும்.
உண்மை. இவற்றின் வளர்ச்சிக்குக் கெரட்டின் (keratin) தேவைப்படுகிறது. எனவே, தோல், முடி, நகங்களில் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. இவற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்கள், விலங்குகள் மூலம் பிறருக்கும் பரவுகின்றன. இத்தொற்றை உடல் பரிசோதனை, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH) நுண்ணோக்கிச் சோதனை ஆகியவற்றால் கண்டறிய முடியும். இவற்றில், ட்ரைக்கோபைட்டன், மைக்ரோஸ்போரம், எபிடெர்மோபைட்டன் என்ற மூன்று இனங்கள் உள்ளன. இத்தொற்றை, தனிநபர் சுகாதாரம், களிம்புகள், தகுந்த மருத்துவ ஆலோசனை மூலம் குணப்படுத்தலாம்.
நாக்கின் சுவை அரும்புகள் (Taste buds) நம் ஆயுட்காலம் முழுவதும் உயிர்ப்புடன் இருக்கும்.
தவறு. நாக்கின் மேற்புறத்தில் மொட்டு போன்று சுவை அரும்புகள் இருக்கும். இவை தான், உணவின் சுவையை உணரச் செய்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் சராசரியாக 10 நாட்கள் மட்டுமே. இனிப்பு, புளிப்பு, கசப்பு உள்ளிட்ட அனைத்துச் சுவைகளையும் நாக்கில் உள்ள சுவை அரும்புகள் தான் உணரச் செய்கின்றன. சுவைகளை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. ஆனால், சுவை நரம்புகள் மூலம், காரம் மட்டும் மூளைக்குச் செல்வதில்லை. அவற்றில் உள்ள காரத்தின் வெப்பம் மட்டுமே நரம்புகளுக்குக் கடத்தப்படுகிறது. எனவே தான், அதிக காரமான உணவுகளைச் சாப்பிடும்போது கண்களிலும் மூக்கிலும் நீர் வருகிறது.
