PUBLISHED ON : ஜூலை 17, 2023

ஜியார்டியாசிஸ் (Giardiasis) தொற்று, காற்று மூலம் பரவும்.
தவறு. ஜியார்டியாசிஸ் என்பது, சிறுகுடலில் ஏற்படும் தொற்று. இது ஜியார்டியா லாம்ப்லியா (Giardia lamblia) எனப்படும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இவற்றால் ஓம்புயிரிகளில் (Host) மட்டுமல்லாது, வெளிப்புறச் சூழலில் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமும், அசுத்தமான உணவு, தண்ணீரைக் குடிப்பதன் மூலமும் ஜியார்டியாசிஸ் பரவுகிறது. இதன் அறிகுறிகளாக வாந்தி, வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை, வயிற்றுவலி, உடல் சோர்வு, தலைவலி ஆகியவை ஏற்படுகின்றன. தகுந்த மருத்துவ சிகிச்சை, ஆன்டிபயாடிக்குகள் மூலம், இத்தொற்றைக் குணப்படுத்தலாம். இத்தொற்றால் மனிதனைத் தவிர நாய்களும் பூனைகளும் பாதிக்கப்படுகின்றன.
முருங்கையின் தாயகம் இந்தியா.
உண்மை. முருங்கையின் அறிவியல் பெயர் மொரிங்கா ஒலிஃபெரா (Moringa oleifera). முருங்கைமரம் மோரிங்கேசே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. முருங்கையின் தாயகம் இந்தியா. ஆசியா முழுவதும் பரவியுள்ளது. முருங்கைமரத்தின் வேர், பட்டை, இலை, காய், விதைகள் என, எல்லா பாகங்களும் பயன்படுகின்றன. முருங்கைக்காய் அதிக அளவு வைட்டமின் சியைக் கொண்டுள்ளது. மேலும் இக்காயில் வைட்டமின்கள் ஏ, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்ளேவின்), பி3 (நியாசின்), பி6 (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகிய சத்துகளும், தாது உப்புகளான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் உள்ளிட்டவையும் அடங்கியுள்ளன.
