
சிட்ரஸ் கேன்கர் என்பது எலுமிச்சைத் தாவரத்தில் ஏற்படும் நோய்.
உண்மை. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட சிட்ரஸ் வகை பழங்களில் இந்த நோய் ஏற்படுகிறது. இது சாந்தோமோனாஸ் சிட்ரி (Xanthomonas citri) எனப்படும் பாக்டீரியாவால் உண்டாகிறது.
இந்த நோய் தாவரத்தின் இலைகள், கிளைகள், முட்கள், பழங்களைப் பாதிக்கிறது. தாவரத்தின் பசுமையான பாகங்கள், முதிர்ந்த பழங்களில் கொப்புளம் போன்ற பழுப்புநிற வழுவழுப்பான விளிம்புகள் ஆகியவற்றில் இந்த பாக்டீரியா காணப்படுகிறது. இந்தக் காயமானது முதலில் சிறிய மஞ்சள் நிறப் புள்ளிகளாகத் தோன்றி, பின்பு பழுப்புநிறப் பகுதியாக மாறுகிறது.
இது 3 முதல் 4 மி.மீ. விட்டம் கொண்டுள்ளது. இந்தப் பழுப்பு நிறக் கொப்புளத்தால் சந்தையில் பழங்களின் விற்பனை விலை குறைகிறது.
உமிழ்நீரில் நொதிகள் காணப்படுவதில்லை.
தவறு. உமிழ்நீரில் பல நொதிகள் உள்ளன. அவற்றுள், 'லைபேஸ்' நொதி, கொழுப்புகளை, கொழுப்பு அமிலங்கள், 'கிளிசரால்' போன்ற எளிய மூலக்கூறுகளாக உடைக்கிறது. 'அமைலேஸ்' மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைக்கிறது. 'மால்டேஸ்' நொதி மால்டோஸை குளுக்கோஸ் போன்ற எளிய சர்க்கரைகளாக மாற்றுகிறது. 'லாக்டேஸ்' நொதி லாக்டோஸை குளுக்கோஸ், கேலக்டோஸாக உடைக்கிறது. 'டைலின்' நொதி மாவுச்சத்தை மால்டோஸ், ஐசோமால்டோஸ் போன்ற எளிய சர்க்கரைகளாக்குகிறது. இந்த நொதிகள் செரிமானம் செய்யும் செயல்முறையைத் தொடங்குவதற்கு மிகவும் அவசியமானவை. மேலும், உமிழ்நீரில் நோயெதிர்ப்பு காரணிகளான லைசோசைம்கள், இம்யுனோ குளோபுலின்கள் ஆகியவை நிறைந்துள்ளன.