
இழித்தும், பழித்தும் பேசுவதற்குப் பயன்படும் சொற்களில் ஒன்று 'கழிசடை' என்பது. அதன் பொருள் என்னவாக இருக்கும்? சொல்லின் பொருளை அறிய அதனோடு ஒட்டியிருக்கும் சொற்பகுதிகளையே ஆராயவேண்டும். அதன்படி, 'கழிசடை' என்ற சொல்லில் இருப்பவை எவை? 'கழி' என்பது ஒரு சொல். 'சடை' என்பது இன்னொரு சொல். இப்போது விடையை நெருங்கிவிட்டோம்.
தலைமுடி வெட்டிக்கொள்ளும் பழக்கம் தற்காலத்தில் பரவலானது. பழங்காலத்தில் ஆடவர், பெண்டிர் இருவரும் கூந்தல் வளர்த்தனர். முற்காலத்தில் தலைமுடியை ஒட்டி வெட்டாமல் நீளமாக வளர்த்திருப்பர். அவ்வாறு வளர்க்கப்படும் முடிக்கற்றை சடை சடையாகவும் ஒட்டிக்கொள்ளும். தனி இழையாகப் பிரிக்க முடியாதபடி சேர்ந்துகொண்ட முடிக்கற்றைதான் 'சடை.' அடிக்கடி முடியிழைகளைச் சீவிப் பண்படுத்தாவிட்டால் சடை பிடித்துக் கொள்ளும். நாமாகவே முடியிழைகளைச் சேர்த்துக் கற்றையாக்கினால் அதுவும் சடைதான். பெண் பிள்ளைகளுக்குத் தலைமுடியைச் சீவிக் கற்றைபிடித்து அழகாக்குவது 'சடை பின்னுவது' எனப்படுகிறது.
இன்றைக்கும் கோவிற்பகுதிகளில் சடையாகத் திரண்டு வளர்ந்துவிட்ட முடியுடைய அடியார்களைப் பார்க்கலாம். ஒருவருடைய தலையில் இருக்கும் வரைக்கும் தான் முடிக்கு மதிப்பு. அது உதிர்ந்துவிட்டால் அதற்கு மதிப்பில்லை. மிகவும் இழிவான பொருளாகிவிடுகிறது. ஒரு பொருளை வேண்டாமென்று ஒதுக்குவதைக் கழித்தல் என்போம். உடலிலிருந்து ஆகாத பொருட்களை வெளியேற்றும் செயல் கழித்தல். கழித்தல் என்றால் நீக்குதல். இனி அந்தப் பொருள் உடனிருந்தால் தீங்கு நேரும் என்பதால் வலிந்து நீக்குகிறோம். அதனால் தான் ஒன்றைத் தூக்கி எறிவதைக் 'கழித்துக் கட்டுதல்' என்கிறோம்.
சடையாகப் பின்னி வளர்ந்துவிட்ட முடியை நாமாகவே மழித்துக் கழிக்கிறோம். அதுதான் 'கழித்த சடை.' நீக்கப்பட்ட தனி முடிக்கே மதிப்பில்லாதபோது, முடிக்கற்றையான சடையை மேலும் தாழ்வாகவே கருதுவோம். அதுதான் 'கழிசடை.' கழித்த சடையைப் போன்ற மதிப்பற்ற இழிபொருள் என்ற பொருளில் பயன்படும் தொடர்தான் 'கழிசடை.'
- மகுடேசுவரன்