sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சங்க காலத் தமிழ் நகரம்

சங்க காலத் தமிழ் நகரம்

சங்க காலத் தமிழ் நகரம்


PUBLISHED ON : டிச 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2019


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இவ்வாண்டு தமிழர்கள் பெருமை கொள்ளும் விதமாக கீழடியைப் பற்றிய கரிம ஆய்வுமுடிவு வெளியானது. அந்த ஆய்வுமுடிவு, கீழடி தொல்பொருட்களின் காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறிவித்தது.

இதுநாள் வரை இந்திய வரலாறு, மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட அகழாய்வுச் சான்றுகளோடு தொடங்கியது. அதற்கும் முன்னே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அரசர்களும் ஆட்சிகளும் குடிவாழ்வும் இருப்பினும், வரலாற்றை எழுதுவதற்குத் தெளிவான சான்றுகள் வேண்டும். இல்லையேல் அவற்றை வரலாற்றில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அவ்வகையில், இந்திய வரலாற்றின் தொன்மைச் சான்றுகள் மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதியில் கிடைத்தன. அங்கே ஒரு நாகரிக வாழ்வு தோன்றி நிலைத்தது என்று ஏற்றுக்கொண்டார்கள். இன்று அப்பகுதி பாகிஸ்தான் நாட்டிற்குள் சென்றுவிட்டது. இந்திய நிலத்திற்குரிய தொன்மை வரலாறு என்றால், அது புத்தர், மகாவீரர் காலத்திலிருந்து தொடங்குகிறது. அவர்கள் சமயப் பெரியார்கள் என்பதால், அவர்களைப் பற்றிய பல சான்றுகள் எஞ்சியிருக்கின்றன.

தென்னிந்தியப் பகுதியில், நம் வரலாற்றின் தொன்மையை விளக்கும் வகையில் தமிழ்ச் சங்க நூல்கள் பல இருக்கின்றன. இலக்கிய இலக்கண நூல்கள் தவிர்த்து, தொல்லியல் சான்றுகள் இன்றும் பற்றாக்குறையே. கடல்கோள்கள், படையெடுப்புகள், அழித்தொழிப்புகள் என, வரலாறு தொடர்ந்து இயங்கிய நிலம் தமிழ் நிலம். அதனால், ஒன்றை அழித்து ஒன்று தோன்றுகையில், நம் எச்சங்களும் சான்றுகளும் அழிந்தன. இந்நிலையில் வராது வந்த மாமணியாகக் கருதவேண்டிய இடம் கீழடி.

மொகஞ்சதாரோ, ஹரப்பாவை அடுத்து, இந்திய வரலாற்றை, புத்தர், மகாவீரர், அசோகர் என்று தொடங்குகிறோம். புத்தர் பிறந்த ஆண்டு கி.மு. 563. கீழடி அகழாய்வில் கண்டறிப்பட்ட பொருட்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அமெரிக்க ஆய்வகம் உறுதிப்படுத்தியிருக்கிறது எனில் கீழடியானது, ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே செயற்பட்ட நகரம் என்பது தெளிவாகிறது. இந்திய வரலாற்றின் தொடக்க வரிசையில் புத்தருக்கும் முன்பாக, நாம் கீழடியைப் பற்றிக் கூறியாக வேண்டும்.

கீழடியில் கண்டறியப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள், கட்டட அமைப்புகள், மண்பாண்ட உடைவுகள், தமிழி எழுத்துகள், அணிமணிகள், விளையாட்டுக் கருவிகள், நீர்வழி அமைப்புகள் ஆகியன அங்கே மிகப்பெரிய நகரமொன்று இருந்திருக்கிறது என்பதைப் பறைசாற்றுகின்றன. இங்கு வாழ்ந்த மக்கள், சுடுமண் குழாய்களை ஒன்றோடொன்று ஒட்டவைத்து உறைகிணறு அமைத்திருக்கிறார்கள். நீர் வெளியேறும் வடிகால்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பானைக்குக் கறுப்பு, சிவப்பு, வெண்மை, செம்பு முதலான வண்ணங்களைப் பூசியிருக்கிறார்கள். பானையில் ஆதன், குவிரன் முதலான ஆட்பெயர்கள் தமிழி எழுத்துகளில் கீறப்பட்டிருக்கின்றன. பானையை வாங்கிச் சென்றவர்களே அதில் தங்கள் பெயரை எழுதியிருக்கிறார்கள். ஆதன், சாத்தன், கொற்றன் முதலான பெயர்கள், நம் இலக்கண இலக்கியங்களில் அவற்றின் பழைய உரைநூல்களிலும் அடிக்கடி இடம்பெறும் பெயர்கள் எம் தந்தை எந்தை என்றும், நும் தந்தை நுந்தை என்றும், ஆதன் தந்தை ஆந்தை என்றும், சாத்தன் தந்தை சாத்தந்தை என்றும் புணர்ச்சி இலக்கணப்படி சேரும்.

புறநானூற்றுப் புலவர்களில் ஒருவர் பிசிராந்தையார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தை பிசிர் ஆந்தையார் எனப்பட்டவர். பானையில் உள்ள பெயர்களும் இலக்கிய இலக்கணப் பெயர்களும் ஒன்றாக இருக்கின்றன.

கீழடி மக்கள் உலோகங்களாலான மாலைப் பொருட்களின் பயன்பாட்டினை அறிந்திருந்தனர். இரும்பைக் கொண்டு அம்பு முதலானவை செய்யப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு நாடுகளிலிருந்து வருவிக்கப்பட்ட அணிமணிகளை அணிந்திருக்கின்றனர். ஓய்ந்தநேரத்தில் சதுரங்கம் போன்ற விளையாட்டையும் விளையாடியுள்ளனர். விளையாட்டுக் காய்கள் தந்தத்தாலும் சுடுமண்ணாலும் செய்யப்பட்டிருந்தன. பாண்டி விளையாடுவதற்குப் பயன்படும் பலகை போன்ற பொருளும் கிடைத்திருக்கிறது.

கிடைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட பொருள் வகைகளில் ஒன்றாக இருக்கின்றன. எனவே, ஐயத்திற்கிடமின்றிக் கீழடியைச் சங்ககாலத் தமிழ் நகரம் எனலாம். இவ்வாண்டின் சிறப்புகளில் சிறந்ததாகக் கீழடி ஆய்வைக் கூறலாம்.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us