தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'ழ'கரம் படும் பாடு!

'ழ'கரம் படும் பாடு!

'ழ'கரம் படும் பாடு!


PUBLISHED ON : டிச 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு சொல்லில் ழகர எழுத்து ஒன்று வந்திருந்தால் அதைத் தூய தமிழ்ச்சொல் என்று ஐயமின்றிக் கூறலாம். தமிழின் தலைசிறந்த சொற்கள் பலவற்றில் கட்டாயம் ழகர எழுத்து பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, வாழ் என்ற சொல். வாழ்வே உயிர்களின் நோக்கம். வாழ்க என்று வாழ்த்துவதே உயரிய வாழ்த்து. அவ்வாறே சினந்து பழிக்குமிடத்திலும் 'ஒழிக' என்று ழகரச் சொற்பயன்பாட்டோடு கூறுகிறோம்.

மிகச்சிறந்த சொற்கள் யாவற்றிலும் இந்த ழகரப் பயன்பாடு இருப்பதைப் பார்க்கலாம். உயிர்வாழத் தேவை, தொழில். உணவு விளைவிக்கும் தொழிலாவது உழவு. வெய்யிலின் ஆறுதல் நிழல். அஞ்ச வேண்டியது பழிக்கு. கண்ணெனப்படுவது விழி. மனிதர்கள் அறிவுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாவது மொழி. மனத்திற்கு மகிழ்வூட்டுவது அழகு. பூஞ்சோலையாய் மனத்தை மயக்குவது பொழில். தமிழ் என்ற பெயரிலேயும் ழகரம் வருகிறது.

சிலர் ழகரத்தைத் தம் பேச்சுக்கொச்சையில் யகரமாக்கிப் பேசுவர். 'வாழைப்பழம்' என்பதை 'வாயப்பயம்' என்பர். கழுதை என்பது வாயில் வராது. 'கயித' என்பர். எழுத்திலும் ழகரத்தின் உயர்வு தெரியாமல் பல சொற்கள் ளகர எழுத்தால் எழுதப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, உழுந்து என்பதை உளுந்து என்றே எழுதுகிறார்கள். குழறுபடி என்பதைக் குளறுபடி என்கிறார்கள். 'தீ கொழுந்து விட்டு எரிந்தது' என்பதில் உள்ள கொழுந்து, 'கொளுந்து' ஆகிவிடுகிறது. சுழித்தான் என்று எழுதாமல் 'சுளித்தான்' என்று எழுதுகின்றனர்.

ழகரத்தின் அருமை தெரியாமல், பேச்சிலும் எழுத்திலும் அது படும் பாடு சொல்லித் தீராது. ழகர ஒலியே தமிழின் தனிச்சிறப்பு என்றுணர்ந்து அதை முறையாக உச்சரிக்கவும் எழுதவும் வேண்டும்.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us