PUBLISHED ON : அக் 08, 2018
மழை நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது? மேகம் பொழிவதால்! மேகத்துக்கு எங்கிருந்து கிடைக்கிறது? கடலில் இருந்து நீரை எடுப்பதால்!
இதனை தமிழ் இலக்கியத்தில் நிறையவே காணலாம்.
'குணகடல் முகந்து குடக்கு ஏர்வு
மண் திணி ஞாலம் விங்கக் கம்மியர்'
கீழைக்கடலிலே அதாவது குணகடல் எனப்படும் வங்கக்கடலிலே சென்று, நீரை முகந்து மேகம் மழைபெய்கிறது. அதனால் நிலத்தின் வெப்பம் தணிகிறது என்கிறது, இந்த நற்றிணைப் பாடல்.
'நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும்'
மேகங்கள் கடலில் உள்ள நீரை முகந்து எடுத்து, நிலத்தை முழுகுவிக்க பெய்கிறது என்கிறது பரிபாடல் வரி.
'நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்னல்கா தாகி விடின்'
திருவள்ளுவர் வான்சிறப்பு அதிகாரத்தில்,
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு சென்று பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் என்கிறார்.
'மாக்கடல் முகந்து மாதிரத்து இருளிமலர்தலை
உலகம் புதைய வலன்ஏர்பு'
என்ற அகநானூற்று வரியும் கடலில் இருந்தே மழை நமக்குக் கிடைக்கிறது என்கிறது.
'முழங்கு கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை'
என்பது திருமுருகாற்றுப்படையில் வரும் வரி. மேகம் கடலில் இருந்து நீரை முகந்து எடுத்துச் செல்வதால் மழை பொழிகிறது என்று குறிப்பிடுகிறது.
