PUBLISHED ON : ஜன 15, 2018

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோட்டயம் அருகில் உள்ள தலயோலம்பரம்பு எனும் ஊரில் அமைந்துள்ள பள்ளியொன்றின் மாணவர்கள் ஒரு புதுமையான திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளனர். வைக்கம் முகம்மது பஷீர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இவர்கள். பள்ளியைச் சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று, இயற்கை விவசாய முறையில் காய்கறித் தோட்டம் அமைத்துத் தருவதாகச் சொன்னபோது, அப்பகுதி மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
விளைச்சலைப் பெருக்க பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்றவற்றில் ரசாயனங்கள் மிகுந்துள்ளன. அவை உணவுப் பொருட்களில் படிவதால் ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ரசாயன உரங்கள் இடாத இயற்கை விவசாயம் பலராலும் முன்னெடுக்கப்படுகிறது.
நமக்குத் தேவையான காய்கறிகளை மட்டுமாவது இயற்கை விவசாய முறையில் வீட்டிலேயே வளர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம், நம் உணவில் ரசாயனங்களைத் தவிர்க்க முடியும் என்பதே இதன் அடிப்படை. வீட்டை ஒட்டி இருக்கும் நிலப்பரப்பிலோ மொட்டை மாடியிலோகூட இயற்கை விவசாயம் செய்ய முடியும். மிகவும் குறைந்த அளவு நீர் போதும்; வீட்டில் கிடைக்கும் காய்கறிக் கழிவுகளே உரங்கள். இவ்விவசாயத்தில் செலவு மிகவும் குறைவு.
அம்மாவுக்கான சமையலறைத் தோட்டம் (Kitchen garden for Mother) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதுமையான திட்டத்தின் கீழ் இதுவரை 100 வீடுகளில் மாணவர்கள் தோட்டம் அமைத்துக் கொடுத்துள்ளனர். பள்ளியில் செய்ய வேண்டிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனைச் செய்கிறார்கள். மேலும் பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஹரிதபாவனம் (Harithabhavanam) என்று பெயரிடப்பட்டுள்ள மின் சிக்கனத்திற்கான திட்டத்தின்படி எல்.ஈ.டி. விளக்குகளை வீடுகளுக்கு வழங்கியுள்ளனர். அம்மா அறியான் (Amma Ariyan) என்ற பெயர் கொண்ட தெரு நாடகம் ஒன்றையும் இம்மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். போதைப் பொருள் ஒழிப்பு, வன்முறை தவிர்ப்பு போன்ற கருத்துகளை முன்னிலைப்படுத்தும் இந்த நாடகமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

