PUBLISHED ON : செப் 05, 2016

பள்ளிக்காலத்தில், மாணவர்களை நண்பராக பாவிக்கக்கூடிய ஆசிரியர்கள் வாய்ப்பது பெரும்பேறு. அப்படி எனக்கு அதிர்ஷ்டமாகக் கிடைத்த அரிய ஆசிரியர்தான் 'கேவிஆர்' என்று நாங்கள் அன்போடு குறிப்பிடும் கே.வெங்கடேச ரவி. மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர். வாசிப்பு, எழுத்து இரண்டின் மீதான ஆர்வம் பள்ளி நாட்களிலேயே ஏற்பட்டுவிட்ட என்னைப் போன்றவர்களுக்கு வீடும், பள்ளியும் அதை ஊக்குவிப்பதாகவே அமைந்தது மகிழ்ச்சியானது. என்னுடைய ஆசிரியரான கே.வெங்கடேச ரவி வாசிப்பில் தீவிர ஈடுபாடு உடையவர். எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது.
அவரிடம் பயில்கிற மாணவர்களை ஒரு நண்பனைப்போல நடத்துவார். ஒரு நண்பனுடன் பேசுகிற உணர்வே அவருடன் பேசும்போது எழும். அவரிடமிருந்து எங்களையறியாமல் நாங்கள் கற்றுக்கொண்டவை ஏராளம். நற்பண்புகள், வாசிப்பின் அவசியம் என பல விஷயங்களை தனது செயல்களால் உணர்த்தியவர். எப்போது சந்தித்தாலும் நட்பான சினேகப் புன்னகையுடன் பழகக்கூடியவர். மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர் என பல விஷயங்கள் அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆசிரியர்களுடன் பள்ளி நாட்களுக்குப் பிறகு தொடர்பு வைத்திருப்பவர்கள் மிகக் குறைவு. ஆனால், இன்றும் அவருடைய மாணவர்கள் பலர் அவரது தொடர்பில் உள்ளனர். மாணவராக அவருக்கு நாங்கள் எதுவுமே கொடுத்ததில்லை. ஆனால் அவரிடமிருந்து கற்றுக்கொண்டதும், பெற்றதும் ஏராளம். இன்றும், ஆசிரியர் என்றதும் நினைவில் வருவது முதலில் அவர் பெயர்தான்.
- பொன். வாசுதேவன்
