PUBLISHED ON : ஏப் 11, 2016

முற்காலத்தில் அரண்மனைகளையும் வணிகத் தெருக்களையும் பெரிய மதில் சுவர் கட்டிப் பாதுகாத்துக்கொள்வது வழக்கம். இதைக் கோட்டை என்பார்கள்.
பண்டைய சீனப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசர்கள், ஒரு படி மேலே போய்விட்டார்கள். தாங்கள் ஆட்சி செய்த ஒட்டுமொத்த நாட்டையும் சுற்றி மதில் சுவர் எழுப்பினார்கள்.
சீனாவின் சுவர் கட்டும் கலாச்சாரம் தொடங்கியது 3,100 வருடங்களுக்கு முன்னர். அப்போது சீனப் பிரதேசத்தை ஆண்டது, 'சூ' (Zhou) என்ற அரச வம்சம். இவர்கள், 'யான்யுன்' (YanYun) என்ற நாடோடி இனத்தவரின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, நீளமான சுவரை எழுப்பினார்கள்.
'சூ' வம்சத்தைத் தொடர்ந்து, ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர்வரை, இருபதுக்கும் மேற்பட்ட வம்சங்கள் சீனாவின் வெவ்வேறு பகுதிகளை ஆட்சி செய்து இருக்கின்றன. இவை அனைத்துமே, தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த சுவரைப் பலப்படுத்தியும், விரிவாக்கியும் வந்திருக்கின்றன.
காலப்போக்கில் இடிந்தது, சிதைந்தது போக, தற்போது எஞ்சியிருக்கும் சுவரின் நீளம் மட்டுமே 20,000 கி.மீ.க்கும் மேல். சீனாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் லயொனிங் மாகாணத்தில் (Liaoning) ஹுஷான் என்ற (Hushan) இடத்தில் தொடங்கும் சீனப் பெருஞ்சுவர், மேற்குப் பகுதியில் கன்சு (Gansu) மாகாணத்தில் ஜியாயுகான் (Jiayuguan) என்ற இடத்தில் முடிவடைகிறது.
இது வெறும் சுவர் அல்ல. கோட்டைகள், கண்காணிப்புக் கோபுரங்கள், வீரர்கள் தங்குவதற்கான இடங்கள், குதிரைகள் செல்வதற்கான தடங்கள், கடந்து செல்வதற்கான சிறு திறப்புகள் என்று பல முக்கிய அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் அமைப்பு!
அந்தந்த இடங்களில் இருந்த சூழலைப் பொருத்தும், கிடைத்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டும் சுவர் எழுப்பப்பட்டது. சுவரின் பெரும்பகுதி மலைமுகடுகளை ஒட்டியே கட்டப்பட்டு இருக்கிறது. மிகவும் ஆபத்தான, செங்குத்துச் சிகரம்வரை பெருஞ்சுவர் நீண்டதும், அந்தச் சிகரத்தையே அரணாக விட்டுவிட்டு, பிறகு சிகரத்துக்கு அப்பால் தொடர்ச்சியாக சுவரைக் கட்டுவது வழக்கமாக இருந்துள்ளது. மலைமுகடுகள் இயற்கையாகவே சுவரின் பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.
வியப்பில் ஆழ்த்தும் கட்டமைப்புதான்!
