PUBLISHED ON : அக் 30, 2017

ஹோமி ஜஹாங்கிர் பாபா
30.10.1909 - 24.1.1966
மும்பை
அணு வெடிப்பு, ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியம் சுத்திகரிப்பு போன்றவை குறித்து, முதன்முதலாக இந்தியாவில் ஆய்வு செய்தவர். இவரது ஆலோசனையால் தான், நாடு சுதந்திரமடைந்த பிறகு, அணு ஆராய்ச்சி மையம் ஒன்று தொடங்கப்பட்டது. அணுசக்தித் துறையில் இந்தியாவின் புகழ் உலக நாடுகள் வியக்கும் வகையில் உயர்ந்தது. இவை அத்தனைக்கும் காரணம் ஹோமி ஜஹாங்கிர் பாபா.
தொடக்கக் கல்வி கற்கும்போதே அறிவியல் பாடங்களில் ஆழ்ந்த ஈடுபாடு. மும்பையில் பள்ளி, பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு, மேற்படிப்புக்காக கேம்பிரிட்ஜ் சென்றார். டாக்டர் பட்டம் பெற்றுத் தமது ஆராய்ச்சிப்பணியையும் அங்கேயே தொடர்ந்தார். அப்போது, புகழ்பெற்ற விஞ்ஞானி நீல்ஸ் போருடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகள், குவாண்டம் கோட்பாட்டுக்கு வழிவகுத்தது. மேலும் வால்டர் ஹைட்லருடன் பணியாற்றிய அனுபவம் காஸ்மிக் கதிர்களைப் புரிந்துகொள்வதில் உதவியாக இருந்தது.
1940ல் இந்தியா வந்து பெங்களூரு அறிவியல் நிறுவனத்தில் இயற்பியல் துறைப் பேராசிரியராகி, காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கினார். வளர்ந்த நாடுகளைப்போல் இந்தியாவிலும் அணுசக்தி ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, டாடா அடிப்படை ஆய்வு மையத்தை உருவாக்கி, அதன் இயக்குநரானார்.
இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று, இந்தியாவின் முதல் அணு உலை 'அப்சரா'வை மும்பை அருகே டிராம்பேயில் செயற்பட வைத்தார். இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றது.
ஹோமி பாபாவின் முயற்சிகளால், தாராப்பூர் (மகாராஷ்டிரம்), ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின. அணுசக்தியை ஆக்கப்பூர்வ முறையில் பயன்படுத்துவதே இவரது நோக்கம்.
விண்வெளிக் கல ஏவுகணைகளின் 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுகளில் இவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இன்று அந்தத் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் முழுமையான வெற்றியை, அவருக்காகச் சமர்ப்பிப்பதுதான் நாம் செலுத்தும் நன்றிக்கடன்.
* 'காமா கதிர்களை உட்கிரகிப்பதில் எலக்ட்ரான் பொழிவுகளின் பங்கு' பற்றி ஆய்வுகள் செய்தார். இந்த ஆய்வு 'பாபா சிதறல்' என அழைக்கப்படுகிறது.
* இந்திய அணுமின் கழக நிறுவனம் தற்போது, 'பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்' என அழைக்கப்படுகிறது.
