PUBLISHED ON : மே 02, 2016

உலகத்திலேயே மிகச்சிறிய நாடு வாடிகன் என்பார்கள். ஆனால், அதைவிடச் சிறிய நாடு ஒன்று உள்ளது. 550 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே உள்ள 'தி பிரின்சிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்' (The Principality of Sealand) என்ற நாடுதான் அது. இங்கிலாந்து நாட்டின் 'சுஃபோக்' (Suffolk) கடற்கரையிலிருந்து 7 கடல் மைல் (நாட்டிகல் மைல்/Nautical Mile) தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த நாடு.
இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, இங்கிலாந்து ஒரு கோட்டையை, கடலுக்கு நடுவில் உருவாக்கியது. சுமார் 300 பேர்களைத் தாங்கக்கூடிய இந்தக் கோட்டையை ஒரு பெரிய படகில் முதலில் உருவாக்கி, பின் அதைத் தண்ணீருக்குள் இடம் மாற்றினர். கான்கிரீட், இரும்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்தக் கோட்டை 'ராயல் ஃபோர்ட் ரஃப்ஸ் டவர்' (Royal Fort Roughs Tower) எனப் பெயரிடப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கி ஜெர்மனியைக் கண்காணித்தனர். இங்கிலாந்து, 1956ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் கோட்டையைப் பராமரிக்காமல் விட்டுவிட்டது.
அதன் பின் பதினொரு வருடங்கள் கழித்து இங்கிலாந்து ராணுவத்தில் காலாட்படை மேஜராக வேலை செய்திருந்த 'ராய் பேட்ஸ்' (Roy Bates) என்பவர் 'ரேடியோ எசக்ஸ்' (Radio Essax) என்ற ரேடியோ ஸ்டேஷன் தொடங்குவதற்காக இங்கு வந்தார். அதன் பிறகு அந்த இடத்தை இங்கிலாந்து நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தனக்குச் சொந்தமானதாக ஆக்கிக்கொண்டார். பின்னர் 'சீலேண்ட்' (Sealand) என்று அந்தக் கோட்டைக்குப் பெயர் மாற்றம் செய்து தனியாக அரசாங்கம், தேசியக்கொடி, 'சீலேண்ட் டாலர்' (Sealand Dollar) என்ற பணம் முதலியவற்றை வடிவமைத்தார். அவருடைய குடும்ப வாரிசுகள் சீலேண்டின் இளவரசர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சீலேண்ட் நாட்டின் தேசியக் குறிக்கோளாக 'கடலிலிருந்து, சுதந்திரம்' என்ற பொருள்படும் 'ஃப்ரம் தி சீ, ஃப்ரீடம்' (From the Sea, Freedom) என அறிவிக்கப்பட்டது. ராய் பேட்ஸின் வாரிசுகள் முதுமை காரணமாக பிரிட்டனில் வசித்து வரும்நிலையில், உலகின் குட்டி நாடான சீலேண்ட், தற்போது உல்லாசத் தங்கும் இடமாக (ரிசார்ட் - Resort) மாற்றப்பட்டுள்ளது.
