PUBLISHED ON : மார் 14, 2016

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்துகொண்டு இருந்ததால், பிற வகுப்புகளுக்குப் பாதி நாள்தான் பள்ளிக்கூடம் இருந்தது. ஏற்கெனவே மொத்தப் பாடத்தையும் நடத்தி முடித்து விட்டிருந்ததால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் விசேஷமாக நடக்கவில்லை. அந்தந்தப் பாடத்திட்ட ஆசிரியர்கள் அமைதியாக உட்கார்ந்து படிக்கச் சொன்னார்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கச் சொன்னார்கள்.
கணக்கு டீச்சருக்கு தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. அமைதியாக உட்கார்ந்து ரிவிஷன் கணக்குகளைப் போடச் சொல்லிவிட்டுப் போனார்.
கொஞ்ச நேரம் வகுப்பு அமைதியாக இருந்தது. பிறகு ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். கிளாஸ் லீடர் மீனாவும், முரளியும் இரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை, எல்லோரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்கள்.
பர்வீன்தான் முதலில் வாய் விட்டுச் சொன்னாள்.
''மாயா டீச்சர் இருந்தால் நல்லா இருக்கும்.''
ஒவ்வொருவரும் அப்படியே நினைத்தார்கள்.
பளீரென்று மின்னல் வெட்டியது. 'ஹை...மேசைக்கு அருகில் மாயா டீச்சர்... '
''டீச்சர், நாங்க நினைச்சோம், நீங்க வந்துட்டீங்க...''
''இன்னிக்கு எதைப் பத்தி எங்களுக்கு சொல்லித் தரப் போறீங்க டீச்சர்?''
''எதைப் பத்தியும் சொல்லப் போறதில்லை'' என்றார் மாயா டீச்சர்.
''என்ன டீச்சர் இப்படி சொல்லிட்டீங்க?''
''எட்டாம் கிளாஸ் வந்துட்டீங்க. இந்த வயசிலே நிறையக் கேள்வி கேட்கணும்.''
''கேள்வி கேட்டாலே எதிர்த்துப் பேசறோம்னு எங்க வீட்ல, ஸ்கூல்ல திட்டறாங்க டீச்சர்.''
''கேள்வி கேட்கறதுன்னா, புதுசா விஷயங்களைத் தெரிஞ்சுக்கக் காட்டுற ஆர்வம். ஏட்டிக்குப் போட்டியாப் பேசறது இல்லை.''
''ஓ... அப்படியா? சரி கேள்வி கேட்கறது என்ன பெரிய கஷ்டமா? கேக்குறோம். பதில் சொல்லத்தான் நீங்க இருக்கீங்களே.''
''அதுதான் கிடையாது. இனிமே கேள்வியும் நீங்கதான் கேட்கணும். பதிலையும் நீங்கதான் தேடணும்.''
''அது எப்படி எங்களால முடியும்?''
''லைப்ரரிக்குப் போங்க. இன்டர்நெட்டில் பாருங்க.''
''அப்ப இனிமே நீங்க வரவே மாட்டீங்களா?''
''கண்டிப்பா வருவேன். நீங்களும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. உங்களோட தினசரி வாழ்க்கையில உங்க முன்னேற்றத்தைப் பின்னுக்கு இழுக்கற மாதிரியான சிந்தனைகளோ, செயல்பாடோ இருந்தா, கண்ணாடி காட்டிக் கொடுத்துடும். நீங்களே கூடிப் பேச, சிந்தனையில, செயல்ல இருக்கற குறைபாட்டை, மாறுதலைப் புரிஞ்சுக்கலாம்.''
''டீச்சர், இங்கதான் எனக்குக் கொஞ்ச நாளாக ஒரு பிரச்னை வருது.''
''என்ன பிரச்னை வருது?''
''மாயக் கண்ணாடி, மோசமான சிந்தனையை, பிஹேவியரை, கோணல்மாணலான முகத்தோற்றம் மூலம் காட்டிக் கொடுத்துடுதுதான். ஆனா, நல்ல பிஹேவியருக்கு மாறணும்னு மனசு நினைச்சாலும் அதை நடைமுறைப்படுத்துறது கஷ்டமாக இருக்கு.''
''ஆமாம் டீச்சர்! ஒரு நாள், இரண்டு நாள் ஒழுங்கா ஃபாலோ பண்ண முடியுது. ஆனா, மறுபடியும் பழைய பிஹேவியருக்குப் போயிடுது.''
''புதிர் போடாம, யாராவது ஒருத்தராவது உதாரணத்தோட சொல்லுங்க.''
''டீச்சர், நீங்க சொன்ன பிறகு நான் ரெண்டு நாளா காலைல ஐந்து மணிக்கு எழுந்தேன். ஆனா மூணாவது நாள் எழுந்திருக்க மனசே வரலை. இழுத்துப் போத்திக்கிட்டு தூங்கத்தான் தோணுச்சு.''
''எந்த ஒரு செய்கையும், பழக்கமாகுறதுக்கு கொஞ்ச காலம் ஆகும். அது வரைக்கும் பொறுமையா மனசிலே உறுதியோட அதைக் கடைப்பிடிக்கணும்.''
''அதுக்கு ஏதாவது சுலபமான வழி இருக்கா டீச்சர்?''
''சுலபமானது இல்ல, ஆனா யோசிக்க யோசிக்க அந்த வழி உங்களுக்குப் பிடிபடும்.''
''அதெப்படி டீச்சர்?''
''யாருமே போகாத பாதையில, மொதல்ல போகும்பொழுது பாதை கரடுமுரடாக இருக்கும். நடக்க நடக்க பாதை தெளிவா உருவாயிடும்.''
''அப்ப, யாருமே யோசிக்காததை யோசிக்கச் சொல்றீங்களா?''
''அடடா, நான் சொன்னதை அப்படியே எடுத்துக்கிட்டே. முதல்ல யோசிக்க ஆரம்பிக்கும்போது, நம்ம சிந்தனை எங்கெங்கோ அலைபாயும். காலப்போக்கில் எப்படி யோசிக்கணுங்கிறது பிடிபடும். அதுக்கு அடிப்படைத் தேவை ஒண்ணு இருக்கு.''
''சொல்லுங்க டீச்சர்.''
''நாம ஏன் வாழணும், எப்படி வாழணும் அப்படீன்னு வாழ்வதைப் பற்றி ஒரு நோக்கம் இருக்கணும்.''
''புரியலையே டீச்சர்.''
''என்னை எப்படிப்பட்ட ஆளா மத்தவங்க நினைக்கணும்னு ஒவ்வொருத்தரும் யோசிக்கணும்.''
''டீச்சர், இன்னிக்கு நீங்க ரொம்ப சீரியசாப் பேசுறீங்க, கேட்க நல்லாத்தான் இருக்கு.''
''ஆனா கொஞ்சம் புரியுது.கொஞ்சம் புரிய மாட்டேங்குது. ஏற்கெனவே பரீட்சைக்குப் படிச்சுப், படிச்சு மண்டை குழம்பிப் போய்க் கிடக்குது.''
''அதனால்தான் நான் கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன்னு சொன்னேன். பரீட்சை எழுதுங்க. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகு பார்ப்போம்.''
''ஓ...கே டீச்சர்! ஆனா கண்டிப்பா வரணும்.''
''கண்டிப்பா வருவேன். எல்லாரும் பரீட்சை நல்லா எழுத, ஆல் த பெஸ்ட்.''
''வாழ்த்து மட்டும்தானா டீச்சர்?''
''இல்லியே, எல்லாருக்கும் ஒரு பேனாவும் உண்டு'' என்றபடி ஜிப்பாவில் இருந்து, ஆளுக்கொரு பேனாவை எடுத்து நீட்டினார் மாயா டீச்சர்.
லஞ்ச் பெல் அடித்தது. மாயா டீச்சர் 'பை... பை...' எனக் கையை ஆட்டியபடியே மறைந்தார்.
முற்றும்.
