PUBLISHED ON : ஆக 15, 2016

ககத்திய (கர்நாடகா) சமஸ்தானத்தைச் சேர்ந்தவர் 1778 ஆம் ஆண்டு பிறந்தவர் ராணி சென்னம்மா. கிட்டூரை ஆட்சி செய்த மல்லசர்ஜாவை (Mallasarja) மணம் புரிந்த பிறகு, அந்நாட்டின் ராணி ஆனார். குதிரைச் சவாரி, கத்திச் சண்டை, வில் வித்தை என அத்தனை் போர்க்கலைகளும் ராணிக்குத் தெரியும்.
மல்லசர்ஜா 1816ல் இறந்தார். இவர்களின் மகனும் 1824ல் உயிர் இழந்தார். ராணி ஆட்சிப் பொறுப்பு ஏற்று, சிவலிங்கப்பா என்ற சிறுவனைத் தத்தெடுத்து, தன் மகனாக அறிவித்தார். 'வாரிசு அற்ற அரசுகள் தங்களுக்கே உரிமை என்று நாட்டை ஒப்படைக்கச் சொன்னது ஆங்கிலேய அரசு. ராணி மறுத்தார். விளைவு போராக வந்தது. ராணி கோட்டை மீதேறி நின்று கொண்டு தன் படைகளுக்குக் கட்டளை இட்டார். ஆங்கிலச் சிப்பாய்களை வாள் சுழற்றி விரட்டினார். போரில் ராணியின் படை வென்றது. ஆங்கிலேயத் தளபதிகள் சர் வால்டர் ஸ்டீவன்சன், எலியட் என்னும் இரண்டு அதிகாரிகளைச் சிறைப்பிடித்தார் ராணி.
பிணை அதிகாரிகளை மீட்க பேச்சு வார்த்தை நடத்தியது ஆங்கிலேய அரசு. ஒரு புறம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டே மறுபுறம் வெளியூர்களில் இருந்து கூடுதலாக பீரங்கி, காலாட்படையை வரவழைத்து ராணியை சரணடையச் சொன்னார்கள் ஆங்கிலேயர்கள். ராணியின் வீரமும், சுதந்திரமும், தேசப்பற்றும் இதற்கு மறுப்புச் சொல்லின. அவர் மறுபடியும் போர்க்களம் புகுந்தார்.
புலியென ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டு இருந்த ராணியின் வாள், ஒரு கட்டத்தில் தவறி, கீழே விழுந்துவிட்டது. சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் சென்னம்மாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாய் நாடு, சுதந்திரம் என்றெல்லாம் கனவு கண்ட சென்னம்மா 'இந்தியா ஒரு நாள் சுதந்திரம் பெற்றே தீரும்' என்ற கனவுடன் (1829) தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.
