PUBLISHED ON : ஆக 05, 2019

ஒரு காரில் வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது கையை வெளியில் நீட்டினால் இழுக்கும் விசைதான் டிராக் (Drag). நீரிலும் இதை உணரலாம். விமானங்கள் டேக் ஆஃப் ஆனதும், அதன் சக்கரங்கள் உள்ளிழுத்துக் கொள்வது, இந்த உராய்வு விசையைச் சமாளிக்கத்தான். இந்த உராய்தலைக் குறைக்கத்தான் நாசா ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர்.
நீரில் ஏற்படும் உராய்வு விசையைச் சமாளிக்க நாசாவில் நடக்கும் ஆராய்ச்சிகளின் மூலம் தயாரிக்கப்பட்டது தான், LZR RACER என்ற ஸ்பீடோ நிறுவனம் தயாரித்த நீச்சல் உடை. இது ஒரு நீச்சல் வீரனின் தோலுக்கும் நீருக்குமான உராய்தலை 24 சதவீதம் குறைக்கிறது. உடலை இறுக்கும்படி ஆடை அணிந்தாலும், காற்று புகுந்து தண்ணீரைப் புறந்தள்ளும் அளவு இந்த உடை தயாரிக்கப்படுகிறது. Hydro foam Compression System என்ற முறையில், இந்த உடை நீச்சல் வீரர்களின் உடலை இறுக்கமாக ஏரோடைனமிக் வடிவத்தில் வைத்து வேகமாகவும் இலகுவாகவும் நீந்துவதற்கு உதவுகிறது. நீந்துபவரின் தோல் கூட உராய்தலால் வேகத்தைக் குறைக்கும் என்பதால், இந்த உடையைக் கால்வரை அணிவதற்கு ஏற்பவும் தயார் செய்கின்றனர்.
2008இல் ஒலிம்பிக்கில் சில வீரர்கள் LZR RACER உடையணிந்து கொண்டு கலந்து கொண்டனர். விளைவு?
இந்த உடை அணிந்து நீந்தியதால், 13 உலக சாதனையை உடைத்தார்கள்! விண்வெளியில் நடக்கும் உராய்வைத் தவிர்ப்பதற்கும், தண்ணீர் உராய்வுக்கும் ஒரே தீர்வு.
- ராம்
