PUBLISHED ON : ஆக 06, 2018

மேற்கு வங்க மாநிலம், நாராயணகர் என்ற ஊரைச் சேர்ந்த ரூபமா பிரமாணிக் 11ஆம் வகுப்பு படிக்கும் ஏழ்மையான மாணவி. கடந்த வாரம், ஒருநாள் பள்ளியில் ஆங்கில வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த ரூபமா, எதேச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். அப்போது, பள்ளிக்கு அருகே உள்ள குளத்தில், ஒரு குழந்தை தவறுதலாக இறங்குவதைப் பார்த்தாள்.
உடனே, வகுப்பறையைவிட்டு வெளியே ஓடிச்சென்று குளத்தினுள் குதித்து நீந்திச் சென்றாள். இதைப் பார்த்த அவளது ஆசிரியையும், அக்கம்பக்கத்தாரும் பின்னால் ஓடிவர, வெற்றிகரமாக அக் குழந்தையைக் காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்து சேர்ந்தாள் ரூபமா.
கரைக்கு கொண்டுவரப்பட்ட குழந்தைக்கு பள்ளியின் உதவித் தலைமையாசிரியை, உடனடியாக முதலுதவி சிகிச்சைகளை அளித்தார். அதன் பின் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போது அக்குழந்தை ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குளத்தில் மூழ்கி, ரூபமாவால் காப்பாற்றப்பட்ட மூன்று வயதுக் குழந்தையின் பெயர் ராகுல். தினக்கூலியான பிதேஷ் சிங் என்பவரின் மகனான ராகுல், வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளான். பின்னர் ஆபத்தை அறியாமல் குளத்தினுள் இறங்கிவிட்டான். அவனைத்தான் ரூபமா வகுப்பறையிலிருந்து பார்த்துள்ளார். நீரில் மூழ்கும் ஒருவரை காப்பாற்றுவது எளிதல்ல. அவர்கள் காப்பாற்ற வருபவர்களையும் தங்களையறியாமல் உள்ளே இழுப்பார்கள். எனவே, காப்பாற்ற வேண்டியவரின் தலைமுடியை மட்டும் பிடித்து இழுத்துக் கொண்டு நீந்துவதே பாதுகாப்பானது. எனவே, நன்கு நீச்சல் தெரிந்தால் மட்டுமே, இது போன்ற சாகசச் செயல்களில் ஈடுபடுவது நல்லது.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையைக் காப்பாற்றிய ரூபமாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. பள்ளி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அரசு அலுவலர்கள் என, பலரும் சிறுமிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
