PUBLISHED ON : டிச 11, 2023
நாம் அங்கங்கே கேட்கும் ஒரு வசனம்: “உன்னால் என் கனவு நினைவாகிவிட்டது.”
இந்தச் சொற்றொடரில் பெரிய பிழை உள்ளது. பொருட்பிழை. அதாவது அர்த்தத்தில் தப்பு.
இந்த வாக்கியத்தை நாம் இப்படிப் புரிந்துகொள்வோம்… பேசும் நபருக்கு ஏதோ கனவு இருந்திருக்கிறது; அந்தக் கனவு, எதிரில் இவரது பேச்சைக் கேட்டுக்கொண்டு இருக்கும் நபரால், நிறைவேறிவிட்டது. இதுதான் பேசுபவர் சொல்ல வந்த அர்த்தம்.
ஆனால், அந்த அர்த்தம் மேலே சொன்ன வாக்கியத்தில் வெளிப்படவில்லை. அதற்கு எதிர்மாறான அர்த்தம்தான் உள்ளது. விளக்கமாகப் பார்ப்போம்.
கனவு என்பது என்ன?
அது ஓர் ஆசை என்று கொள்வோம். ஆசைக்கு உருவம் இல்லை. ஆசை என்பது (கனவு என்பது) நாமாக நினைத்துக்கொள்வது. 'ஒரு நாள் நான் ஏரோப்ளேனில் போகவேண்டும். இதுதான் என் கனவு.' ஆக நம் எண்ணத்தைத்தான் கனவு என்று சொல்கிறோம்.
நினைவு என்பது என்ன?
அதுவும் எண்ணம்தான். நாம் நினைப்பது எதுவோ அதுவே நினைவு. 'ஒரு நாள் நான் ஏரோப்ளேனில் போக வேண்டும் என்பது என் ஆசை. என் நினைவில் அந்த ஆசைதான் உள்ளது.'
எனவே, கனவு என்பதும் நினைவு என்பதும் நம் மனத்தில், சிந்தனையில் இருப்பவைதான்.
அப்படியானால், மேலே சொன்ன அர்த்தம் சரியாக வெளிப்படுமாறு எப்படிச் சொல்ல வேண்டும்?
'உன்னால் என் கனவு நனவாகிவிட்டது' என்று சொல்லவேண்டும்.
நனவு என்பது நடப்பு உலகோடு தொடர்புடையது. நம் கண்ணெதிரே நடந்துவிட்டது.
மேலே உள்ள பாராவில் ஆசைப்பட்ட நபர் ஏரோப்ளேனில் போகிறார் என்றால் அவரது கனவு நனவாகிவிட்டது என்று பொருள்.