தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மக்கள் விஞ்ஞானிகளே வருக! வருக!

மக்கள் விஞ்ஞானிகளே வருக! வருக!

மக்கள் விஞ்ஞானிகளே வருக! வருக!


PUBLISHED ON : ஏப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உமா மிஸ் ரொம்பவும் பரபரப்பாக இருந்தார். கைபேசியில் நிறைய நேரம் எதையோ தேடிக்கொண்டே இருந்தார். ஓவியாவும் நானும் பார்த்துக்கொண்டே இருந்தோம்.

“நேத்து ராத்திரியிலிருந்து இன்டர்நெட்டே கெடைக்கமாட்டேங்குது. வேற சிம் கார்டு போட்டு டிரை பண்ணிக்கிட்டு இருக்கேன்ப்பா.”

சமீபத்தில் பலருக்கும் இதே அவஸ்தைதான். ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாற்ற முடியாமல் அப்பாகூட சிரமப்பட்டார். நான், உமா மிஸ் போனை வாங்கி, எனக்குத் தெரிந்த வித்தையையெல்லாம் காண்பித்தேன். 'சிம்'கார்டை கழட்டித் துடைத்துவிட்டு போட்டபோது, இணைய இணைப்பு சட்டென்று கிடைத்தது.

உடனே, உமா மிஸ், தான் எடுத்த சில புகைப்படங்களை, ஒரு செயலியின் வழியாக பதிவேற்றினார்.

“இது என்ன மிஸ்?” என்றாள் ஓவியா.

“இது 'ரோட்கில்ஸ்' அப்படிங்கற ஒரு வெப்சைட். நேத்து ராத்திரி நான் ஊர்லேருந்து கார்ல வந்துகிட்டு இருந்தேன். வழியில இரண்டு இடங்கள்ல சாலையில் சில விலங்குகள் அடிபட்டுக் கிடந்ததைப் பார்த்தேன். ஹைவேல வாகனங்கள் போற வேகத்துல இதுமாதிரி விலங்குகள், பறவைகள் அடிபட்டு செத்துபோயிடுதுங்க. யாருமே அதைக் கண்டுக்கமாட்டாங்க. அதுவும் ஒரே இடத்துல, திரும்பத்திரும்ப இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துக்கிட்டே இருக்கும். அதைக் குறிச்சுவெக்க யாருக்கும் நேரமில்ல, பொறுமையில்ல… அதைத்தான் நான் செய்யறேன்.”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஏன் மிஸ், இதைப் பதிவு செய்யணும்?”

“அப்பத்தானே அதைத் தவிர்க்கற வழிய கண்டுபிடிக்க முடியும். அரசாங்கத்துல இருக்கிற உரிய துறையோட கவனத்துக்கு எடுத்துக்கிட்டுப் போக முடியும். ஒருசில பகுதிகளில் மான்கள் நடமாட்டம் இருக்கும். காட்டை அழிச்சு நாடு, நகரமாக்குனது நம்மோட தப்பு. அதுங்களுக்கு இன்னும் அதுதான் அதனோட வாழ்விடம். குறைந்தபட்சம் இப்படிப் பதிவு செஞ்சு வெச்சா, அந்தப் பக்கமா போகற மக்கள், இன்னும் கொஞ்சம் கவனத்தோட வண்டி ஓட்டலாம். விபத்துகளையும் விலங்குகளோட உயிரிழப்புகளையும் தவிர்க்கலாமே.”

நல்ல உத்தி. சாலைகளில் அடிபட்டுக் கிடக்கும் எத்தனையோ நாய்களைப் பார்த்திருக்கிறேன். பாவமாக இருக்கும். “இது மாதிரி பதிவு செய்யறதுக்கு என்ன மிஸ் செய்யணும்?”

“நீயே 'சிட்டிஸன் சயின்டிஸ்ட்'டா மாறவேண்டியதுதான்.”

“அப்படின்னா?”

“இன்றைக்கு பத்திரிகைத் துறையில, யாரு வேணுமானாலும் செய்திகளையோ புகைப்படங்களை எடுத்து, இதழ்களுக்கு அனுப்பலாம். எல்லா இடங்களிலும் நிருபர்கள் இருக்க முடியாதில்லையா? மக்களே செய்தியாளர்களா செயற்படுவதற்குப் பெயர் சிட்டிஸன் ஜர்னலிஸ்ட். அதுமாதிரி மக்களே விஞ்ஞானிகளாகச் செயற்படுவதற்குப் பெயர் தான் சிட்டிஸன் சயின்டிஸ்ட்.”

“விஞ்ஞானிகள் நம்மையெல்லாம் ஏத்துப்பாங்களா மிஸ்?”

“ஏன் மாட்டாங்க. அவங்க நமக்காகத்தானே வேலை செய்யறாங்க. அவங்களுக்குத் தேவையான விஷயங்களில் நாம் உதவிகரமாக இருந்தா, நாம சேகரிச்சுக் கொடுக்கற தகவல்களை அவங்க பயன்படுத்திக்குவாங்க.”

“ஓ!”

“ஆமாம். உங்க ஊர்ல ஒரு குறிப்பிட்ட காலத்துல மரங்களோட இலை உதிரலாம். சில பூக்கள் பூக்கலாம். சிலசமயம் சீதோஷ்ண நிலையே மாறலாம். இதையெல்லாம் எங்கேயும் பதிவே ஆகாமல் இருக்கும். அதேபோல், ஒருசில பறவைகள் உங்க ஊருக்குப் பக்கத்துல இருக்கற மலைப் பிரதேசத்துக்கு வரலாம், ஏரி, குளங்களுக்கு வரலாம். அதையெல்லாம் மத்தவங்க யாரும் பார்த்தே இருக்க மாட்டாங்க. அப்படி ஒரு பறவை இங்கே வந்துபோற விஷயமே நம்ம விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. அதேபோல் ஒருசில மலைப்பிரதேசங்கள், விநோதமான பூச்சிகள், வண்டுகள் கூடு கட்டியிருக்கலாம். உங்க கண்ணுல மட்டும் அது தெரியலாம். அல்லது உங்கள் குடும்பத்துல இருக்கறவங்க மட்டும் ஒருசில செடி, கொடிகளைப் பத்தி தெரிஞ்சு வெச்சிருக்கலாம்.

இதையெல்லாம் இன்னிக்கு பதிவு செய்து வைக்கணும்ங்கற எண்ணம் உதிச்சிருக்கு. நம்மோட அறிவும், தகவல் ஞானமும் நம்மோடவே அழிஞ்சுபோயிடக் கூடாது இல்லையா? அதை அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கணும். அப்படின்னா, எல்லா இடங்களிலும் மக்கள் நேரடியா ஈடுபடணும். அதுதான் சிட்டிஸன் சயின்டிஸ்ட்டோட வேலை.”

“இதனால எனக்கு என்ன மிஸ் கிடைக்கும்?”

“நல்ல கேள்வி. முதல்ல உன்னோட ஆர்வத்துக்கு இத்தகைய மக்கள் அறிவியல் திட்டங்கள் நல்ல தீனி. விஞ்ஞானிகள், மக்களைத் தங்களோட ஆய்வுகளுக்கு உதவக்கூடியவங்களா மட்டுமல்ல, பங்காளிகளாகவே பார்க்கவும் அங்கீகரிக்கவும் ஆரம்பிச்சு இருக்காங்க. அப்புறம் ஒருசில பறவைகள், விலங்குகள், பூச்சிகளை முதன்முதலில் கண்டுபிடிக்கறவங்களுக்கு இருக்கிற 'கிக்' இருக்கே. அதன் சுகமே தனி. வரலாறு முழுக்க உன் பெயர் இடம்பெறும். 'இவர்தான் இன்ன பறவையை முதன்முதல்ல கண்டுபிடிச்சவரு'னு நம்ம 'பட்டம்' இதழ்ல ப.கோபாலகிருஷ்ணன் எழுதுவாருன்னா பார்த்துக்கோயேன்.”

மிஸ் சொன்ன விதம் எனக்கு நாணத்தை ஏற்படுத்திவிட்டது. இனி நானும் இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கேற்க முடிவுசெய்து விட்டேன்.

தகவல் பெட்டகம்

https://www.roadkills.in/ - சாலைகளில் அடிபட்டு இறக்கும் விலங்குகள், பறவைகளைப் பதிவு செய்யும் தளம்

https://indiabiodiversity.org/ - இந்தியாவின் பல்லுயிரினங்களைப் பதிவுசெய்து வைக்கும் தளம்

https://ebird.org/home - புதுப்புது பறவைகளை கண்டுபிடித்து, புகைப்படங்களை வலையேற்றும் தளம்

http://www.seasonwatch.in/ - இந்தியாவில் கால மாற்றத்தைப் பதிவு செய்யும் மக்கள் அறிவியல் திட்டம்.

https://birdcount.in/ பறவைகளைக் கணக்கெடுக்கும் திட்டம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us