PUBLISHED ON : டிச 03, 2018

பெயர்ச்சொல் முதலிலும், அதையடுத்து ஒரு வினைச்சொல்லும் வந்தால், அது எழுவாய்த் தொடர் என்பது நமக்குத் தெரியும். 'பாரி கொடுத்தான்' என்பது அவ்வாறு அமைந்திருக்கிறது. பாரி என்ற பெயர்ச்சொல் முதலில் வந்தது. கொடுத்தான் என்ற வினைச்சொல் பெயர்ச்சொல்லை அடுத்து வந்தது. பெயரான எழுவாயும் வினைமுற்றாம் பயனிலையும் அடுத்தடுத்து வந்தன. பாரி கொடுத்தான் என்பதில் வலி மிகவில்லை.
பெயரும் (பாரி) வினையும் (கொடுத்தான்) என்னும் அமைப்பிலேயே நாம் எப்போதும் எழுதவோ பேசவோ போவதில்லை. பெயர் வினைகளை மாற்றியும் அமைக்கலாம். 'பாரி கொடுத்தான்' என்று சொல்லாமல் 'கொடுத்தான் பாரி' என்றும் சொல்லலாம். 'குழந்தை சிரித்தது' என்று சொல்லாமல் 'சிரித்தது குழந்தை' என்றும் கூறலாம். பேச்சிலும் எழுத்திலும் இவ்வாறு வினைச்சொல்லை (கொடுத்தான், சிரித்தது) முதலில் கூறி, அதன்பிறகு பெயர்ச்சொல்லைச் சேர்க்கும் வழக்கம் உண்டு. 'காடு செழித்தது' என்று கூறுவது இயல்பாக இருக்கிறது. 'செழித்தது காடு' என்று கூறும்போது உவப்பும் உணர்ச்சியும் தெரிகின்றன.
ஒரு வினைமுற்றினை முதலில் அமைத்து, அதன் பிறகு அந்த வினைக்குத் தொடர்புடைய பெயரைச் சேர்த்து எழுதுவது 'வினைமுற்றுத் தொடர்' எனப்படும்.
'கண்டேன் சீதையை' என்பது வினைமுற்றுத் தொடருக்குப் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு. நடந்து முடிந்த வினையை (கண்டேன்) முதலில் கூறவேண்டும். அதன் பிறகு வருவது ஒரு பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்.
எழுவாய்த் தொடருக்கு எவ்வாறு வலி மிகவில்லையோ, அவ்வாறே வினைமுற்றுத் தொடருக்கும் வலி மிகுவதில்லை.
சிரித்தது குழந்தை
பறந்தது பறவை
பூத்தது பூ
இவை யாவும் வினைமுற்றுத் தொடர்கள். முதலில் வினைமுற்றும் அதையடுத்து ஒரு பெயர்ச்சொல்லும் வந்தன. அவற்றுக்கிடையே வலி மிகவில்லை. வினைமுற்றுத் தொடரில் முதலில் வரும் சொல் வினைமுற்றாக (செயல் முடிவுற்றததாக) இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
- மகுடேசுவரன்
