PUBLISHED ON : டிச 03, 2018

பலகையொலி
தாமரைக்காடு
இந்த சொற்களைப் படித்தால் என்ன பொருள் புரிகிறது?
'பலகையொலி' என்பது 'மரப்பலகையின் ஒலி' என்று ஒரு பொருள் வருகிறது. 'பல கை ஒலி' எனப் பிரித்தால் 'பல கைகள் எழுப்பும் ஒலி' என்று வேறொரு பொருள் தருகிறது.
'தாமரைக்காடு' என்பது தாமரைகள் பூத்திருக்கும் காடு என்று பொருள். அதை 'தா மரைக் காடு' எனப் பிரித்தால் 'தாவுகின்ற மான்கள் (மரை) நிறைந்த காடு' என்றும் பொருள்படும்.
ஒரே சொல், அவை பிரிந்திருந்தால் ஒரு பொருளும், சேர்ந்திருந்தால் ஒரு பொருளும் தருகின்றன. இதே போல, 'புத்தியில்லாதவன்' என்பதை சேர்த்துப் படிக்கும்போது அறிவில்லாதவன் என்ற பொருள் தருகிறது. அதைப் பிரித்தால், 'புத்தியில் ஆதவன்' அதாவது, 'அறிவில் சூரியனைப் போன்றவன்' என்ற பொருளாகிறது. வேறொரு சொல் 'மாதேவா'. இதை 'மாதே வா' என்றால் 'பெண்ணே வா' என்று பொருளாகும். 'மா தேவா' என்றால் பெரிய கடவுள் என்றாகிறது.
தமிழ் எப்படி விளையாடுகிறது பாருங்கள்!
