PUBLISHED ON : பிப் 08, 2016

தண்ணீருக்கு நிறம் இல்லை. ஆனால், தண்ணீர் உறைந்து உருவாகும் பனிக்கட்டி வெள்ளையாக இருக்கிறது. இது ஏன்? அந்த வெண்மை எங்கே இருந்து வந்தது?
தண்ணீரின் மேற்பரப்பு சமமானது, மென்மையானது. அதன் மீது படுகிற ஒளியின் சிறு பகுதியே எதிரொளிக்கப்படுகிறது. தண்ணீர்ப் பரப்பில் விழும் ஒளியின் பெரும் பகுதி நீரினுள் புகுந்து செல்கிறது. அதன் காரணமாகவே தண்ணீர் தெளிவாக, நிறமின்றிக் காட்சியளிக்கிறது.
தண்ணீர் அதிகமாக குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டியாக உருமாறுகிறது. ஏராளமான பனிப் படிகங்களின் (ஐஸ் கிரிஸ்டல் - Ice- Crystals) இணைப்பே பனிக்கட்டி.
பனிப் படிகங்களின் இடையே உள்ள நுண்ணிய குமிழ்களின் இடைவெளியில் காற்று நிரம்பியிருக்கும். இந்தப் படிகக் குவியல் மீது ஒளிக் கதிர்கள் விழும்போது, அவை வளைந்து போவதுடன், எதிரொளிக்கவும் (ரிஃப்ளக்ட் - Reflect) செய்கின்றன.
எல்லாப் படிகங்களும் ஒளிக்கதிர்களை ஒரே திசையில் எதிரொளிப்பது இல்லை. பல்வேறு திசைகளில் அவை சிதறி விடுகின்றன. சிதறிய இந்த ஒளி பனிக்கட்டியை வெள்ளை நிறமாகத் தோன்றச் செய்கிறது.

