தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'அல்ல' எங்கே வரும்?

'அல்ல' எங்கே வரும்?

'அல்ல' எங்கே வரும்?


PUBLISHED ON : ஜூலை 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

மொழிப் பயன்பாட்டில் ஒன்றை மறுத்து, மற்றொன்று உள்ளது என்பதைக் கூற 'அல்ல' என்று பயன்படுத்துவோம். ஆனால், அந்தச் சொல்லை வகைதொகை இல்லாமல் எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொண்டுள்ளோம். பன்மைக்கு மட்டும்தான் 'அல்ல' என்பதைப் பயன்படுத்த வேண்டும். அந்தப் பன்மை அஃறிணையிலும் இருக்க வேண்டும்.

அவை ஆடுகள் அல்ல; அவை கிளிகள் அல்ல; அங்குள்ளவை நூல்கள் அல்ல; அவர் கூறியவை நற்கருத்துகள் அல்ல - என்று பயன்படுத்தலாம். இங்கே அல்ல என்று மறுக்கப்படும் பெயர்ச்சொற்கள் பன்மையில் இருக்கின்றன. அவை அஃறிணையாயும் இருக்கின்றன.

அஃறிணை ஒருமைக்கு அல்ல என்று எழுதக்கூடாது. 'அன்று' என்று எழுத வேண்டும். அது பறவை அன்று; அது மயில் அன்று; வடை நெய்யினால் சுடப்பட்டது அன்று.

அவன் கவிஞன் அல்ல என்று எழுதலாமா?

அவள் பாடகி அல்ல என்று எழுதலாமா?

அவர்கள் தொழிலாளர்கள் அல்ல என்று எழுதலாமா?

எழுதவே கூடாது. ஏனென்றால், உயர்திணைக்கு ஒவ்வோர் இடத்திலும் ஒருமை பன்மை உணர்த்துமாறு வரவேண்டும். ஆண்பாலா, பெண்பாலா, பலர்பாலா என்பதையும் காண்பிக்க வேண்டும். ஏனென்றால், அல் என்பது குறிப்பு வினைச்சொல்.

அவன் கவிஞன் அல்லன்

அவள் பாடகி அல்லள்

அவர்கள் தொழிலாளர்கள் அல்லர் - என்று எழுதவேண்டும். அல் என்ற வினைச்சொல் ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கேற்ப மாறி நிற்பதைப் பாருங்கள்.

இதே சொல்லைத் தன்மையிடத்தில் பயன்படுத்த நேர்ந்தால் என்ன சொல்ல வேண்டும்?

நான் உறவினன் அல்லன் என்று சொல்லலாமா?

அதுவும் கூடாது.

நான் உறவினன் அல்லேன் என்று கூறவேண்டும். பன்மைக்கு நாங்கள் உறவினர்கள் அல்லோம் என்பதுதான் பிழையற்றது.

முன்னிலையில் எப்படிச் சொல்வது? நீங்கள் காவலர்

அல்லீர் என்று வரும். ஒருமைக்கு நீ காவலன் அல்லாய்.

நாம் எதையுமே பார்க்காமல் எல்லாவற்றுக்கும் 'அல்ல அல்ல' என்று பயன்படுத்திக் கொண்டுள்ளோம். அவை சரியானவை அல்ல.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us