PUBLISHED ON : மே 02, 2016

உழைக்கும் மக்களை நேசித்ததால், இளைஞனாக இருந்தபோதே என்னை 'தந்தை' என அழைத்தார்கள். ஜெர்மனியில் உள்ள ட்ரையர் (Trier) எனும் நகரம்தான் நான் பிறந்த இடம். என்னுடைய தந்தை வசதியான குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர். அதனால், என்னையும் சட்டம் பயில பான் (Bonn) பல்கலைக்கு அனுப்பினார். சட்டம் படிக்க விருப்பமின்றி பெர்லின் பல்கலையில் வரலாறு, மெய்யியல் பயின்றேன். அதன்பிறகு, யெனா பல்கலையில் மெய்யியல் முனைவர் பட்டம் பெற்றேன்.
பெர்லின் (Berlin) பல்கலை, என் மத நம்பிக்கையை மாற்றி நாத்திகன் ஆக்கியது. கல்வியை முடித்து, அரசு எதிர்ப்பாளராக திரும்பி வந்த எனக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. ஆகவே, 1841ல் கொலோன் நகரில் இருந்த 'ரைனிஷ் ஸைத்துங்' (Rheinische Zeitung) எனும் இதழின் ஆசிரியராக இருந்தேன். பிறகு, பாரிஸ் சென்று 1844ல் ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ்-ஐ (Frederick Engels) சந்தித்தேன். எங்களுக்குள் நட்பு ஏற்பட்டு, இறுதிவரை தொடர்ந்தது.
பாரிஸில் இருந்தபோது ஜென்னியுடன் காதல் மலர்ந்தது. அப்போது எனக்கு வயது 17. அவளின் குடும்ப எதிர்ப்பின் காரணமாக 8 ஆண்டுகள் காதலைச் சொல்லாமல் ஜென்னியின் 29ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டேன்.
பாரிஸில் இருந்து ப்ரூசல்ஸ் (Brussels) சென்று 1847ல் 'தி பாவர்ட்டி ஆஃப் பிலாசஃபி' (The Poverty of Philosophy) என்ற என் முதல் நூலை வெளியிட்டேன். அடுத்த ஆண்டு ஏங்கெல்ஸ் உடன் சேர்ந்து 'கம்யூனிஸ்ட் மெனிஃபெஸ்டோ' (Communist Manifesto) எனும் நூலை வெளியிட்டேன்.
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையும் அவருடன் எழுதி 1848ல் லண்டனில் வெளியிட்டோம். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆப்ரஹாம் லிங்கனை ஆதரித்து வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்று முன்கூட்டியே கணித்து எழுதினேன்.
லண்டனில் வாழ்ந்த போது கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்து வாழும் நிலை ஏற்பட்டது. வீட்டைக் காலி செய்யும் நிலையில், தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் என் ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார் ஏங்கெல்ஸ். இதுதான் என் கடைசி வருமானம். பத்திரிகைத் தொழிலில் சம்பாதித்த பணத்தை ஆராய்ச்சியிலும், நூல்களை எழுதுவதிலும் செலவழித்தேன்.
'மூலதனம்' என்னும் உலகப் புகழ்பெற்ற நூலின் முதல் தொகுதியை 1872ல் ரஷ்ய மொழியில் வெளியிட்டேன். இது என் 40 ஆண்டு கால உழைப்பு. அடுத்த பகுதிகளைப் படித்து, திருத்தினார் ஏங்கெல்ஸ். வரலாற்றில் எங்கள் இருவரின் பெயர்களும் பிரிக்க முடியாதபடி இணைந்துவிட்டன!
கார்ல் மார்க்ஸ் (Karl Marx)
பிறப்பு: மே 5, 1818
மறைவு: மார்ச் 14, 1883
