PUBLISHED ON : ஆக 29, 2016

ஆங்கிலேயர் ஆதிக்கம் செய்த இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கிய காலத்திலேயே அதற்காகக் குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். பம்பாயில் (மும்பை) ஒரு பார்சியக் குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு 4 வயதாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றாலும் என்னை நன்கு படிக்கவைத்தார். படித்து முடித்தபின் மும்பை எல்பின்ஸ்டன் (Elphinstone) கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினேன். அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியனும் நான்தான்!
அரசியலில் பயணத்தை 1852ல் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து ஆங்கிலேய கவர்னர்களுக்கு கடிதம் எழுதினேன். இந்திய மக்களின் அறியாமையைக் காரணம் காட்டி அந்தக் கடிதங்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்கள். இதற்காகவே, மக்களுக்கு கல்வியறிவையும் விடுதலை வேட்கையையும் புகட்ட அறிவியல் மற்றும் இலக்கிய சங்கங்களைத் தொடங்கினேன்.
இங்கிலாந்திற்கு 1855ல் சென்று, முதல் இந்திய வர்த்தக அமைப்பை 1859ல் தொடங்கினேன். அங்கு வசித்தபோது இங்கிலாந்து நாட்டு மக்களிடையே ஆங்கில ஆட்சியில் இந்தியர்கள் படும் துன்பங்களை, பேச்சுகள், கட்டுரைகள் மூலம் விளக்கினேன். பின்னர் இந்தியாவுக்கு வந்து, இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும் விளக்கங்களுடன் சுட்டிக் காட்டினேன். இந்தியாவில் தனி நபர் வருமானம் 1870ஆம் ஆண்டில் 20 ரூபாய் மட்டுமே என்பதையும் கூறினேன்.
ஒரே குறிக்கோளைக் கொண்டிருந்த இந்திய தேசிய சங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. அதன்பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினேன்.
'பாவர்ட்டி அண்டு அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா' (Poverty and Un-British Rule in India) என்ற நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதினேன். சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் என் பங்களிப்பும் இருக்கிறது. சுயராஜ்யக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த நான்தான், காந்தியடிகள், திலகர் போன்ற தலைவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தேன்!
தாதாபாய் நவ்ரோஜி
பிறப்பு: செப்டம்பர் 4, 1825
மறைவு: ஜூன் 30, 1917
