PUBLISHED ON : செப் 26, 2016

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தேன். என்னுடைய தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். நான், மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, கங்கைக் கரையில் தொலைந்துவிட்டேன். பிறகு, இடையர்களால் மீட்கப்பட்டு அவர்களிடம் சிலகாலம் வளர்ந்தேன். என்னுடைய ஒன்றரை வயதில் தந்தை இறந்துவிட, அம்மா மற்றும் சகோதரிகளுடன் தாத்தா வீட்டிற்குச் சென்றுவிட்டோம். மேற்படிப்பிற்காக வாரணாசி சென்று அங்கே மாமா வீட்டில் தங்கிப் படித்தேன். மாணவனாக இருந்தபோது புத்தகங்கள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். குரு நானக் வரிகள் மீது அதிகப் பிரியமாக இருந்தேன்.
என்னுடைய 17ஆவது வயதில், 1924ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றேன். பின்னர் உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு, 9 வருடங்களைச் சிறையில் கழித்தேன். சாதியை வைத்து என்னை அடையாளப்படுத்துவதை விரும்பவில்லை. பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கிவிட்டு, ஹரிஜன சேவையில் தீவிரமாக ஈடுபட்டேன். என் பெயரின் கடைசியில் இருப்பது கூட காசி, வித்யா பீடத்தில் நான் படித்துப் பெற்ற பட்டம்தான்.
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவில் முதன் முறையாகப் பெண் நடத்துனர்களைக் கொண்டு வந்தேன். நேருவின் அமைச்சரவையில் 1951ல் ரயில்வே மற்றும் போக்குவரத்து மந்திரியாக பதவி வகித்தேன். அப்போது ஏற்பட்ட அரியலூர் ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகினேன். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு உள்துறை அமைச்சராகி, ஊழலுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டேன். 1964ல் நேருவின் மரணத்திற்குப் பின் காமராஜரால் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டேன். இந்திய குடியரசின் பிரதமராகப் பொறுப்பேற்றபின் இந்தியாவின் விவசாயப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினேன்.
பாகிஸ்தானின் காஷ்மீர் ஆக்கிரமிப்பை எதிர்த்து 1965ல் அந்த நாட்டுடன் போரிட நேர்ந்தது. இந்தப் போரின்போது, உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க, நான் எழுப்பிய 'ஜெய் ஜவான் ஜெய் கிஸான்' (வீரர்களுக்கு வெற்றி! வேளாண்மைக்கு வெற்றி!) முழக்கம் பெரும் எழுச்சி பெற்றது. இந்தியாவில் ஏற்பட்ட 'பசுமை புரட்சி'யின் விளைவால், பல கிராமங்கள் அழிவிலிருந்து மீண்டு வந்தன. அதே போன்று 'வெண்மைப் புரட்சி' எனும் பால் பண்ணைப் பொருட்கள் உற்பத்தியைப் பெருக்க வழிவகுத்தேன். இந்தித் திணிப்பு, மலையகத் தமிழர்களை அகதிகளாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது போன்ற விமர்சனங்கள் என்மீது இருந்தன. 20 மாதங்களே இந்தியாவை ஆண்டாலும் எளியவர்களின் தலைவராகத் திகழ்ந்த எனக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது!
லால் பகதூர் சாஸ்திரி
பிறப்பு: அக்டோபர் 2, 1904
மறைவு: ஜனவரி 11, 1966
