தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நேற்றும் இன்றும் - தாவரவியல் பூங்காக்கள்!

நேற்றும் இன்றும் - தாவரவியல் பூங்காக்கள்!

நேற்றும் இன்றும் - தாவரவியல் பூங்காக்கள்!


PUBLISHED ON : ஜூலை 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சில தாவரங்கள், சில இடங்களில் மட்டுமே வளரும். குறிப்பிட்ட வகைத் தாவரங்களை வேறு இடங்களிலும், அவற்றிற்குத் தேவையான தட்ப வெட்ப சூழலைச் செயற்கையாக உருவாக்கி வளர்க்கலாம். அப்படி உலகெங்கிலும் இருக்கும் தாவரங்களைக் கொண்டுவந்து வளர்க்கும் இடம்தான் தாவரவியல் பூங்கா. தற்போது உலகில் ஏறத்தாழ 1,700 தாவரவியல் பூங்காக்கள் உள்ளன. இவற்றில் சுமார் 80,000 தாவர வகைகள் வளர்க்கப்படுகின்றன.

பண்டைக் காலத்திலேயே தாவரவியல் பூங்காக்கள் இருந்துள்ளன. அரசர்களும், துறவிகளும், தாங்கள் பயணம் செல்லும் பகுதிகளில் பயன்பாடு மிக்க தாவரங்களைக் கண்டால், அவற்றைக் கொண்டுவந்து தங்களது தோட்டங்களில் வளர்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பாவில் மருந்துவக் குணங்களுடைய தாவரங்களை வளர்ப்பதற்காகவே பிசிக் கார்டன்ஸ் (Physic Gardens) என்ற பூங்காக்கள் தோற்றுவிக்கப்பட்டன. உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட மூலிகைச் செடிகளும், மரங்களும் இங்கு வளர்க்கப்பட்டன. இவற்றை நவீன தாவரவியல் தோட்டங்களுக்கு முன்னோடி எனலாம்.

ஐரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டில், அறிவியல் சிந்தனை வலுப்பெறத் தொடங்கியது. 'மறுமலர்ச்சி காலம்' எனப்படும் இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள், தங்கள் வளாகங்களில் தாவரத் தோட்டங்களை ஏற்படுத்தின. மருத்துவக் குணம் கொண்ட தாவரங்களின் பண்புகளைக் கல்வி நோக்கிற்காக ஆராய்வது, இந்தத் தோட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.

பிற்பாடு 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய நாடுகள் தங்களது ஆதிக்கத்துக்கு உட்பட்ட காலனிய நாடுகளில், தங்களுக்குப் பயன்படும் பணப்பயிர்களைக் கண்டறிந்து விளைவிக்க தாவரவியல் பூங்காக்களை உருவாக்கின. இங்கிலாந்து நாட்டில் 'கியு' (Kew) எனும் இடத்தில் உள்ள ராயல் பொட்டானிக்கல் கார்டன் (1759), கொல்கத்தாவில் இருக்கும் இந்திய தாவரவியல் பூங்கா (1787), மொரிஷியஸ் நாட்டில் இருக்கும் தாவரவியல் பூங்கா (1770) போன்றவை இதற்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டன. இதன் விளைவாகவே சிங்கப்பூரில் ரப்பரும், இந்தியாவில் தேயிலையும், கரீபியன் தீவுகளில் மிளகும் அறிமுகமாயின.

அதன்பிறகு 18, 19ஆம் நூற்றாண்டுகளில், தாவரங்களை அவற்றின் பண்புகளைக் கொண்டு, குடும்பங்களாக வகைப்படுத்தும் தாவர வகைப்பாட்டியல் துறை (Taxonomy) வளர்ச்சி அடைந்தது. இந்தக் காலத்தில் இருந்து, தாவரவியல் பூங்காக்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காகச் செயல்படத் தொடங்கின.

இந்தியாவில், கொல்கத்தாவில் உள்ள இந்திய தாவரவியல் பூங்காவும், உதகையில் அமைந்திருக்கும் அரசு தாவரவியல் பூங்காவும் புகழ் பெற்றவை.

மருத்துவப் பயன்பாடு, பணப்பயிர் வளர்ப்பு, தாவர அறிவியல் ஆராய்ச்சி என இந்தப் பூங்காக்களின் நோக்கங்கள் காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. தற்போது அவை பல்லுயிரியத்தைப் பாதுகாக்கும் அறிவியல் அமைப்புகளாகவும் செயல்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us