PUBLISHED ON : அக் 07, 2026 05:25 PM

திருமலையில் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள 'சுவாமி புஷ்கரிணி' எனும் புண்ணிய தீர்த்தக் குளம், பக்தர்களால் 'சொர்க்கத்தின் தீர்த்தம்' எனப் போற்றி வணங்கப்படுகிறது.
ஐதீகத்தின்படி, சுவாமி புஷ்கரிணி ஸ்ரீ மகா விஷ்ணுவின் தாமரைப் பாதங்களிலிருந்து உருவாகி, ஸ்ரீ பிரம்மதேவனால் புனிதப்படுத்தப்பட்டதாகும்.
தேவாதி தேவர்கள் விளையாடுவதற்கான தடாகமாக கருடாழ்வார் இந்த திவ்ய தீர்த்தத்தை வைகுண்டத்திலிருந்து திருமலைக்குக் கொண்டு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதனால், இக்குளம் வெறும் நீர்நிலையாக மட்டுமின்றி, தெய்வீக ஆற்றல் நிறைந்த புனிதத் தலமாகவே வழிபடப்படுகிறது.
கங்கை உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளின் இருப்பிடமாகவும், உற்பத்தி ஸ்தலமாகவும் பக்தர்கள் இதனைப் கருதுகின்றனர்.
சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சுவாமி புஷ்கரிணி, வரலாற்றுச் சிறப்புடனும் அளப்பரிய நம்பிக்கையுடனும் மிளிர்கிறது. இதன் மையத்தில், விஜயநகரப் பேரரசின் சாளுவ நரசிம்ம ராயரால் 1468-ஆம் ஆண்டு கட்டப்பட்ட 'நீராழி மண்டபம்' அமைந்துள்ளது. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே புஷ்கரிணியில் நடைபெற்ற வழிபாடு மற்றும் ஆரத்தி பற்றிய பதிவுகள் உள்ளதால், இதன் புனித வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது என்பதை அறிய முடிகிறது.
தினமும் மாலையில் சகஸ்ர தீபாலங்கார சேவைக்கு பிறகு, அர்ச்சகர்கள் சுவாமி புஷ்கரிணிக்கு ஆரத்தி எடுப்பார்கள். ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, வாகன சேவைகளுக்கு முன்பாக காலையிலும் இரவிலும் ஆரத்தி எடுக்கப்பட்டு, இந்நிகழ்வு மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கொண்டாடப்படுகிறது.
அது மட்டுமின்றி பிரம்மோற்சவத்தின் நிறைவு விழாவே இங்குதான் நடைபெறும்.குளக்கரையிலும் பின் குளத்திலும் நடைபெறும் சுவாமியின் சக்ர ஸ்நானத்தைக் காணவும் சுவாமியுடன் சேர்ந்து நீராடவும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த புஷ்கரணியில் அதிகாலையிலேயே திரண்டிருப்பர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் , நவீன வடிகட்டும் முறைகள் மற்றும் அவ்வப்போது புதிய நீரைப் புதுப்பிப்பதன் மூலம் இக்குளத்தைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் பராமரித்து வருகிறது. இத்தகைய பராமரிப்பு ஏற்பாடுகள் 1972-ஆம் ஆண்டு முதல் முறையாக செயல்பட்டு வருகிறது.
சுவாமி புஷ்கரிணி என்பது எண்ணற்ற புண்ணிய தீர்த்தங்களின் சங்கமமாக பக்தர்கள் நம்புகின்றனர். காலவ, மார்க்கண்டேய, ஆக்னேய, தனத, சரஸ்வதி, யாம்ய, வாயு, வருண மற்றும் வசிஷ்ட தீர்த்தங்கள் இதைச் சுற்றிலும் அமைந்திருப்பதாகவும், இதில் கலப்பதாகவும் பாரம்பரியமாகக் கூறப்படுகிறது.
திருமலை செல்லும் பக்தர்கள் இதன் மகிமை கருதி இங்கு நீராடத்தவறுவது இல்லை.
-எல்.முருகராஜ்
மேலும், மார்கழி மாத வளர்பிறை துவாதசி (மார்கசிர சுக்ல துவாதசி) நாளன்று சூரிய உதயத்தின் போது, கோடி கணக்கான தீர்த்தங்கள் புஷ்கரிணியில் நுழைவதாகவும், அந்நாளில் இதில் புனித நீராடும் பக்தர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
