sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சிந்தனைக் களம்

/

சிந்தனைக்களம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு: அரசியலை புரட்டிப்போடும்!

/

சிந்தனைக்களம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு: அரசியலை புரட்டிப்போடும்!

சிந்தனைக்களம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு: அரசியலை புரட்டிப்போடும்!

சிந்தனைக்களம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு: அரசியலை புரட்டிப்போடும்!

1


PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

.விரைவில் நடத்தப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என, சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அது, இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, வெளியில் பேசிக்கொண்டு, உள்ளுக்குள் அது நடந்துவிடக் கூடாது என்று நினைத்தவர்கள் மீது, ஒரு துல்லிய தாக்குதலை நடத்தி அதிர வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

நம் நாட்டில் கடைசியாக, 1931-ல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல், 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

ஆனாலும், இந்த இடஒதுக்கீட்டின் பலன்கள், யாருக்கு சென்று சேர வேண்டுமோ, அவர்களுக்கு முழுமையாக சென்று சேரவில்லை.

தரவுகள் இல்லை


ஒரு சமூகத்தில் யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ, அவரை கண்டறிந்து உதவி செய்தால் மட்டுமே, அனைவருக்குமான வளர்ச்சி சாத்தியமாகும்.

காங்கிரஸ் உள்ளிட்ட சில தேசிய கட்சிகளும், தி.மு.க., சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற மாநில கட்சிகளும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அவர்களின் நோக்கம், மக்களின் உணர்வுகளை துாண்டி அரசியல் ஆதாயம் அடைவதாக மட்டுமே இருந்தது.

அதனால் தான், அவர்கள் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோதும், மத்தியில் அதிகாரத்தில் பங்கெடுத்த போதும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.

அரசிடம் உண்மையான தரவுகள் இல்லாததால், எந்த பின்தங்கிய சமுதாயம் எது என்பதை கண்டறிவது, பெரும் சவாலாக உள்ளது. ஜாதி சங்கங்கள் தரும் எண்ணிக்கையை கூட்டினால், தமிழகத்தின் மக்கள் தொகை, 20 கோடியை தாண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில், நுாற்றுக்கணக்கான சமூகங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு மட்டுமே, இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்கின்றன.

மீறுகின்றனர்


நம் அரசியலமைப்பு சட்டப்படி, மத ரீதியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது. ஆனாலும், அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டத்தை சில மாநிலங்களில் மீறுகின்றனர்.

இதனால், உண்மையாகவே இடஒதுக்கீடு கிடைக்க வேண்டிய சமூகங்களுக்கு, அது கிடைக்காமல் போகிறது.

இதுபோன்ற குறைகளை களைந்து, உதவி தேவைப்படும் சமூகங்களுக்கு அதை கொண்டு சேர்க்க வேண்டும் எனில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமே. இந்த தொலைநோக்கு பார்வையுடன் தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை பிரதமர் மோடி எடுத்திருக்கிறார்.

சுதந்திர இந்தியாவில் நடக்கவிருக்கும் முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு, அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில், விரிவானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவரின் மதம் மற்றும் ஜாதியை மட்டும் கணக்கெடுக்காமல், அவரது கல்வி, வேலை, வருமானம், சொத்து விபரங்கள் என, அனைத்தையும் உள்ளடக்கியதாக அதாவது, சமூக, பொருளாதார, ஜாதி ரீதியான கணக்கெடுப்பாகவே இருக்கப்போகிறது.

அப்போது தான், எந்த சமூகத்தில் எவ்வளவு பேர் உள்ளனர், அவர்களில், கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், பின்தங்கியவர்கள் எவ்வளவு பேர் என்பது தெரிய வரும். இடஒதுக்கீட்டு பிரிவில் இருந்தும், பலன்கள் கிடைக்காதவர்கள் எண்ணிக்கையும் தெரியவரும்.

யாருக்கு என்ன தேவைப்படுகிறது என்பதும் தெரியும். அதன்பின், ஏற்கனவே உள்ள அரசின் திட்டங்களில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் அல்லது அவர்களுக்காக புதிய திட்டங்களை கொண்டு வரலாம்.

நம் நாட்டில் மதம் மாறிய பலர், இடஒதுக்கீட்டு சலுகைகளை அனுபவிப்பதற்காக, தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து வருகின்றனர். ஹிந்து மதத்தில் மட்டுமல்லாது, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களிலும் பல்வேறு ஜாதிகள் உள்ளன.

உதாரணமாக, தமிழ்நாட்டில் லப்பை, மரக்காயர் போன்றவர்களை கூறலாம். இந்த உண்மைகளும் வெளிவரும் என்பதால், ஜாதிவாரி கணக்கெடுப்பு பெரும் சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கும்.

பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளில் இருந்து, சட்டவிரோதமாக ஊடுருவிய கோடிக்கணக்கானோர் நம் நாட்டில் உள்ளனர். அவர்களை அடையாளம் காணவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும்.

கல்வி, பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் எந்த வாய்ப்பும் வழங்காமல் புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் பற்றியும், ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவரும் என்பதால், நாட்டின் கல்வி, சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்லாது, அரசியல் களத்திலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு பெரும் மாற்றத்திற்கு வித்திடும்.

எனவே தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'சமூக நீதியை நிலைநாட்டுவதில் மத்திய பா.ஜ., கூட்டணி அரசின் உறுதியை, ஜாதிவாரி கணக்கெடுப்பு காட்டுகிறது.

'மத்திய அரசின் இந்த முடிவு சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய அனைத்து பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்கும். பட்டியலின, பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு புதிய பாதையை உருவாக்கும்' என்று தெரிவித்திருக்கிறார்.

சாதித்து காட்டினார்


எது நடக்கவே நடக்காது என்று சொன்னரோ, அதை எல்லாம் நடத்தி காட்டியவர் பிரதமர் மோடி. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி ராமர் ஆலயம் போன்றவை சாத்தியமில்லை என்றே, பலரும் நினைத்தனர்.

அவற்றை பிரதமர் மோடி சாதித்துக் காட்டினார். நம் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வெற்றி பெறாது. குக்கிராமங்களில் இணைய இணைப்பு எப்படி கிடைக்கும் என, உயர் பதவிகளில் இருந்தவர்களே கேலி செய்தனர்.

'இன்றோ நாடெங்கும், தெருவோர வியாபாரிகள், கீரை விற்கும் பாட்டி கூட, டிஜிட்டல் முறையில் பணம் பெறுகிறார்.

இவற்றை எல்லாம் சாத்தியப்படுத்திய பிரதமர் மோடி தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முடிவையும் எடுத்திருக்கிறார்.

'அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். இல்லாதவர் இல்லை' என்ற நிலை வர வேண்டும், என்ற உயரிய நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை வைத்து அரசியல் நடத்தலாம் என்று நினைத்தவர்களின் கனவை, பிரதமர் மோடி தகர்த்திருக்கிறார்.

வானதி சீனிவாசன்

பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர்

.






      Dinamalar
      Follow us