PUBLISHED ON : பிப் 07, 2021

'நோக்கியா மொபைல்' உரிமம் பெற்றுள்ள, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், இந்தியாவில், 'நோக்கியா 3.4' ஸ்மார்ட்போன், விரைவில் அறிமுகம் ஆக இருப்பதை உறுதி செய்துள்ளது. இருப்பினும், இன்னும் தேதி குறிப்பிடப்படவில்லை.
இதற்கிடையே, 'நோக்கியா 3.4' போனுடன் சேர்ந்து, 'நோக்கியா 5.4' போனையும் அறிமுகம் செய்யப்படக்கூடும் என்றும் தகவல்கள் வருகின்றன. மேலும்,10 தேதியன்று, இந்த அறிமுகம் இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
'நோக்கியா 3.4' ஸ்மார்ட்போன், கடந்த செப்டம்பரிலும்; 'நோக்கியா 5.4' டிசம்பரிலும், ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 'நோக்கியா 3.4' போன், 6.39 அங்குல எச்.டி., திரை கொண்டதாகவும், 'யு.எஸ்.பி., டைப் சி' போர்ட் கொண்டதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும், 3 ஜி.பி., x 32 ஜி.பி., மற்றும் 4 ஜி.பி., x 64 ஜி.பி., என இரு வகைகளில், சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை, 3 ஜி.பி.ரேம் கொண்ட போன், 11,999 ரூபாயாக இருக்கக்கூடும்.
போனில் இதய துடிப்பு
'கூகுள் பிக்ஸல்' போன்களில், புதிய வசதி அறிமுகம் ஆக உள்ளது. இனி, கூகுள் பிக்ஸல் போனின், கேமரா சென்சாரைப் பயன்படுத்தி, இதயதுடிப்பு மற்றும் சுவாச அளவு ஆகியவற்றை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
இதற்காக, கூகுள் நிறுவனம், தன்னுடைய, 'கூகுள் பிட்' செயலியை மேம்படுத்தி, இந்த வசதியை பெற, வழிவகை செய்துள்ளது. இருப்பினும் இந்த வசதி, 'கூகுள் பிக்ஸல்' போன்களில் மட்டுமே கிடைக்கும்.
அடுத்த மாதத்திலிருந்து, 'பிக்ஸல்' ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள், இந்த வசதியை பெறுவார்கள் என கூகுள் அறிவித்துள்ளது. அதேசமயம், இதை வைத்து மருத்துவரீதியாக நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
இதில் சிறப்பு என்னவெனில், இதற்காக, போனின் வன்பொருளில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டியதிருக்காது என்பது தான்.
இதற்கிடையே, இதே போன்ற வசதியை, 'சாம்சங்' நிறுவனம் அதன், 'கேலக்ஸி எஸ் 10' வரிசை போன்களில் அறிமுகம் செய்தது. ஆனால் இந்த வசதியை, 'கேலக்ஸி எஸ் 20' போன்களில் தொடரவில்லை. மேலும், இந்த சேவை அகற்றப்பட்டது குறித்து எந்த தகவலையும், 'சாம்சங்' தெரிவிக்கவில்லை.
இதற்கு காரணம், கணக்கீடுகள் அவ்வளவு துல்லியமாக இல்லாதது தான் என்று சொல்லப்படுகிறது.
