PUBLISHED ON : மே 01, 2022

'பிட்பிட்' நிறுவனம், அதன் 9 வகையான ஸ்மார்ட் வாட்சுகளில், புதிய 'நோட்டிபிகேஷன்' வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் குறிப்பிட்ட 9 ஸ்மார்ட் வாட்சுகளிலும், இனி, ஒழுங்கற்ற இதய துடிப்பு குறித்த அறிவிப்பை காண இயலும்.
இம்மாத துவக்கத்தில், இதற்கான எப்.டி.ஏ., எனும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியை இந்நிறுவனம் பெற்றது. இதையடுத்து, இந்த இதய துடிப்பு குறித்த நோட்டிபிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வசதி, 22 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்களுக்கானது இல்லை என, பிட்பிட் அறிவித்துள்ளது.
ஒழுங்கற்ற இதய துடிப்பை அறிவிப்பதன் வாயிலாக, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருப்பதை அறிந்து, விரைவாக மருத்துவ உதவியை நாடி, நலம் பெறலாம் என, பிட்பிட் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த வசதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
