டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலகுவதே சரியானது!
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலகுவதே சரியானது!
PUBLISHED ON : ஏப் 08, 2024 12:00 AM

ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே, 2011ல் மிகப்பெரிய அளவிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அந்தப் போராட்டத்திற்கு பின் உருவானது தான், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி.
அன்னா ஹசாரே நடத்திய போராட்டம் தான், மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2014ல் கவிழ்வதற்கும், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கும் வழிவகுத்தது. அதன்பின், பா.ஜ.,வும், ஆம் ஆத்மி கட்சியும் பரம எதிரிகளாகி விட்டன.
இந்தச் சூழ்நிலையில், டில்லி அரசின் மதுபான கொள்கையுடன் தொடர்புடைய, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் முதல்வர் ஒருவர் பதவியில் இருக்கும் போதே, சிறையில் அடைக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரான முதல்வர் கெஜ்ரிவால், முக்கியமான சதிகாரர். அத்துடன் முறைகேட்டில், கெஜ்ரிவாலுக்கு மட்டுமின்றி, ஆம் ஆத்மி தலைவர்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது என்றும், 'சவுத் குரூப்' என்ற நிறுவனத்திடம் இருந்து, கெஜ்ரிவால் பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளார். தன் கட்சிக்கு சட்டவிரோதமாக பணம் பெறுவதற்காக, தன் முதல்வர் பதவியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என்றும் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, கெஜ்ரிவால் தலைமையிலான அரசில், முன்னர் துணை முதல்வராக பதவி வகித்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் கைதாகி உள்ளார்.
'லோக்சபா தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை, 'காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியை முடக்கும் செயல். குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியினரை சோர்வடையச் செய்யும் செயல். அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில், மத்திய பா.ஜ., அரசு ஈடுபட்டு வருகிறது' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அதே நேரத்தில், டில்லி அரசின் சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின்,கோல்கட்டாவைச் சேர்ந்த நிறுவனத்துடன், ஹவாலா பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளால், 2022 மே 30ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவரது ஜாமின் மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சத்யேந்திர ஜெயின் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்பது, அமலாக்கத்துறை சேகரித்துள்ள ஆவணங்களை மேலோட்டமாக பார்த்த மாத்திரத்திலேயே தெரிய வருகிறது. அவரும், அவரின் கூட்டாளிகளும் குற்றம் புரிந்துள்ளனர் என்பதை உணர முடிகிறது' எனக் கூறி,சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் வழங்க மறுத்துள்ள தும், ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சிறையில் உள்ள காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை விடுவிப்பதற்காக, 2014 முதல் 2022 வரை, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள குழுக்களிடம் இருந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 134 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக, காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் தெரிவித்துள்ள கடுமையான புகாரும், அரவிந்த்கெஜ்ரிவால் மீதான புகாருக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
அதனால், முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் விலகி, தான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றம் வாயிலாக நிரூபிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இது ஒருபுறமிருக்க, ஆளுங்கட்சியின் கைப்பாவையாக புலனாய்வு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு அடிக்கடி ஆளாகும் அமலாக்கத் துறையினரும், கெஜ்ரிவாலின் கைது நியாயமானதே என்பதை நிரூபிக்கும் வகையில், சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையிலான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களின் விசாரணையை முடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

