லோக்சபா தேர்தல் வாக்குறுதிகள் கட்சிகளுக்கு கைகொடுக்குமா?
லோக்சபா தேர்தல் வாக்குறுதிகள் கட்சிகளுக்கு கைகொடுக்குமா?
PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி துவங்கி, ஏழு கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதில், பல வாக்குறுதிகளை வாரி வழங்குவர். ஆட்சியை பிடித்த பின், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் உண்டு; மறந்து விடுவதும் உண்டு.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என, ஒவ்வொரு முறையும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும், அதை யாரும் கண்டு கொள்வதில்லை.
கொடுக்கும் வாக்குறுதியை குறிப்பிட்ட அரசியல் கட்சி நிறைவேற்றுமா என்பதை, மக்கள் தான் தீர்மானித்து ஓட்டளிக்க வேண்டும்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 'நியாய பத்ரா' என அழைக்கப்படும், அதன் தேர்தல் அறிக்கையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், இடஒதுக்கீட்டில்,50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது சட்ட உரிமையாக்கப்படும், அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என்பது உட்பட, 25க்கும் மேற்பட்ட உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் மகாலட்சுமி என்ற திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஆண்டுக்கு1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வேலையில்லா திண்டாட்ட பிரச்னையை தீர்க்க, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்வது, மத்திய அரசு பணிகளில், 30 லட்சம் காலியிடங்களை நிரப்புவது போன்றவை செயல்படுத்தப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனஉத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்தாலும், ரத்து செய்யப்பட்ட அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்படுமா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும், முஸ்லிம்களுக்கு எதிரானது என, 'இண்டியா' கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளால் விமர்சிக்கப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும், தேர்தல் அறிக்கையில்குறிப்பிடவில்லை.
இதேபோல, பாரதிய ஜனதா கட்சியும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும்; நாடு முழுதும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்; அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்; 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு, பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும்; வேலைவாய்ப்பு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என்பது உட்பட பல வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.
எது எப்படியாயினும், இந்த இரு கட்சிகளும் தங்களின் ஆதரவு தளத்தை தக்க வைத்துக் கொள்ளவும், நம்பகத்தன்மையை மீண்டும் பெறவும், தேர்தல் அறிக்கை தவிர, வேறு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் அறிக்கைகளில் நிறைய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை வெற்றிகரமாக மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளையும், இரு கட்சிகளும் கையாள வேண்டும். அதற்கேற்ற வகையில், பிரசார யுக்திகளை கையாள வேண்டும்.
கடந்த 2023ல் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிகள், அக்கட்சிக்கு சாதகமாக அமைந்தன; ஆட்சியை பிடிக்கவும் உதவின. ஆனால், 2019 பொதுத்தேர்தலில், காங்., தேர்தல் வாக்குறுதிகள் மக்களை கவரவில்லை.
எனவே, தேர்தல் அறிக்கையை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், அதை நம்பகத்தன்மை உடையதாக மாற்றுவதிலும் தான், கட்சிகளின் வெற்றி, தோல்விகள் அடங்கியிருக்கின்றன. இந்த விஷயத்தில் சாதிக்கப் போவது காங்கிரசா அல்லது பா.ஜ.,வா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

