அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: நிர்மூலமாக்குவது அவசியம்
அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: நிர்மூலமாக்குவது அவசியம்
PUBLISHED ON : ஜன 08, 2024 12:00 AM

தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் டெக்னாலஜி என அழைக்கப்படும் மின்னணு தொழில்நுட்பம், வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்ற வகையில், இணையதளத்தின் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் உதவியோடு, வலைதளங்கள் வழியாக ஒருவரிடம் உள்ள பணத்தை பறிக்கும், தொழில்நுட்ப ரீதியான வழிப்பறி தான், சைபர் குற்றம் என, அழைக்கப்படுகிறது.
சமீப நாட்களாக நம் நாட்டில், சைபர் குற்றங்கள், அதிர்ச்சி அடையும் அளவுக்கு அதிகரித்துள்ளதாக, இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் தேசிய அளவில், இத்தகைய குற்றங்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதுவே, முந்தைய ஆண்டுகளான, 2022ல், 9.60 லட்சமாகவும், ௨௦௨௧ல் ௪.௫௨ லட்சமாகவும் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி, 2021 ஏப்ரல் முதல் தேதி முதல், 20023 டிசம்பர், 31ம் தேதி வரை, 10,300 கோடி ரூபாய் சைபர் குற்றவாளிகளின் கைக்கு சென்றுள்ளதாகவும், சைபர் குற்ற தடுப்பு போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக, அவற்றில், 1,127 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளதாகவும், அதாவது, 10 சதவீத தொகை அளவுக்கு மட்டுமே சைபர் குற்றவாளிகள் கைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டிலேயே சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரங்களில், தலைநகர் டில்லி முதலிடம் பிடித்துள்ளது. இங்கு லட்சம் நபர்களில், 755 பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில், அவமானம் மற்றும் தர்மசங்கடமான நிலையை தவிர்ப்பதற்காக, பலர் இந்த வகை குற்றங்கள் தொடர்பாக புகார் தருவதே இல்லை.
குறிப்பாக, சிறிய அளவில் பணத்தை பறிகொடுப்போர், அதுபற்றி புகார் தெரிவிப்பதில்லை. லட்சங்களில் இழப்புகளை சந்திப்போர் மட்டுமே புகார் தருகின்றனர் என்றும், சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர்.
மேலும், சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் உள்ளூரை சேர்ந்தவர்களாக மட்டுமின்றி, சர்வதேச அளவில் செயல்படும் கொள்ளை கும்பலாகவும் உள்ளனர். இந்த நபர்களை அடையாளம் காண்பதும் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதுமட்டுமின்றி, சைபர் குற்றவாளிகளை ஒடுக்கும் விஷயத்தில், மாநில அரசுகள் இடையேயும், மத்திய, மாநில அரசுகள் இடையேயும் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் தேவை.
அத்துடன் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் சிம் கார்டுகளை முறைகேடான வகையில் பெற்று பயன்படுத்துகின்றனர் என்ற புகார்கள் அடிப்படையில், கிட்டத்தட்ட 3 லட்சம் சிம் கார்டுகளையும், 2,800க்கும் மேற்பட்ட போலி வெப்சைட்களையும் சட்ட அமலாக்கத் துறையினர் முடக்கியும், சைபர் குற்றவாளிகள் தங்களின் குற்றச் செயல்களை விதவிதமான முறைகளில் தொடர்வது நீடிக்கிறது.
நம் நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள், அதாவது, 'யுனிபைடு பேமண்ட் இன்டர்பேஸ்' எனப்படும், யு.பி.ஐ., வாயிலான பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இந்த வகை பரிவர்த்தனைகளில், 10 கோடிக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், சைபர் குற்றவாளிகள் பிடியில் அப்பாவிகள் சிக்காத வகையில், அவர்களின் பணம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
எனவே, சைபர் குற்றங்கள் இனியும் அதிகரிக்காத வகையில், பாதுகாப்பு முறைகளை பலப்படுத்துவது அவசியம் என்பதுடன், இந்த வகை குற்றங்கள், அவற்றில் ஈடுபடுவோர் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரங்களையும் தீவிரப்படுத்த வேண்டும். நம் நாடு பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த தருணத்தில், நிறுவனங்களையும், தனி நபர்களையும் குறிவைத்து சைபர் குற்றவாளிகள் தங்களின் நடவடிக்கைகளை தொடர்வதை தடுக்கா விட்டால், அது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சைபர் குற்றங்களை நிர்மூலமாக்கும் முனைப்போடு, மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.