எதிர்க்கட்சி தலைவர் பதவி ராகுலுக்கு பொறுப்பு அதிகம்
எதிர்க்கட்சி தலைவர் பதவி ராகுலுக்கு பொறுப்பு அதிகம்
PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM

பதினெட்டாவது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் கடந்த வாரம் துவங்கியது. இந்தத் தருணத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராகுல் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட, 20 ஆண்டு களாகி விட்ட நிலையில், அவர் வகிக்கும் முதல் அரசியல் சட்ட ரீதியான பதவி இது தான்.
அது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளில் அதிக எம்.பி.,க்களை கொண்டிருக்கும் கட்சி என்ற அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. ஏனெனில், 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்கு தேவையான எம்.பி.,க்களின் எண்ணிக்கையை காங்., பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், 2019 லோக்சபா தேர்தலில், காங்., படுதோல்வியை சந்தித்ததால், கட்சித் தலைவர் பதவியையும், ராகுல் ராஜினாமா செய்ததுடன், கட்சியில் வேறு எந்தப் பதவியையும் ஏற்கவும் மறுத்து வந்தார். தற்போதும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவர் ஏற்க மாட்டார் என்ற யூகங்கள் நிலவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், அப்பதவியை ஏற்றுள்ளார்.
ஏற்கனவே இண்டியா கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே காங்., பின்னால் அணிவகுத்த நிலையில், வரும் நாட்களில் அந்தக் கட்சிகளின் ஒற்றுமை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, பார்லிமென்டிற்கு உள்ளே யும், வெளியேயும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கும் என்றும் நம்பலாம்.
அதற்கு ஏற்றார் போல, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரானதும் பேசிய ராகுல், 'பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு அரசியல் ரீதியான அதிகாரம் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களின் குரல் எதிர்க்கட்சிகளின் வாயிலாக ஓங்கி ஒலிக்கும்' என்றார். காங்., கட்சியில் முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், வாரிசு அடிப்படையில், ஒரு சலுகையாகவே ராகுலுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி தற்போது வழங்கப்பட்டிருக்கலாம்.
ஆனாலும், அதற்கு அப்பாற்பட்டு, ஒரு சிறந்த எதிர்க்கட்சி தலைவர் என, மற்றவர்கள் பாராட்டும் வகையில், அவர் செயல்பட வேண்டியது அவசியம். பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதே ராகுலின் சுபாவம் என, பலரும் கூறுவதுண்டு. அது தவறான கருத்து என்பதையும், அவர் தன் செயல்பாடுகள் வாயிலாக நிரூபிக்க வேண்டும்.
எதிலும் பெரிய அளவில் அக்கறை காட்டாத அரசியல்வாதி என்ற இமேஜை ராகுல் மாற்றுவதுடன், தான் ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் பார்லிமென்ட்வாதி என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சி தலைவர் பதவி அவருக்கு தந்துள்ளது.
கடந்த காலங்களில் எதிர்க்கட்சி தலைவர்களாக பதவி வகித்த வாஜ்பாய், சுஷ்மா சுவராஜ் போன்றோர், ஒரு உயர்ந்த தரத்தை பின்பற்றினர். அந்த தரத்தை ராகுலும் பின்பற்ற வேண்டும். 2019 லோக்சபா தேர்தலை விட, இந்தாண்டு லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சி எம்.பி.,க்களுக்கு கிட்டத் தட்ட இணையாக, எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் எண்ணிக்கை உள்ளது.
எனவே, அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் குறித்து, திறமையான முறையில் கேள்விகள் எழுப்பி, ஆளும் கூட்டணியை திக்குமுக்காட வைத்தால், ராகுல் மீது மக்களுக்கு உள்ள மரியாதை மேலும் அதிகரிக்கும் என்பதில் மாற்றமில்லை.
மேலும், லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், குடியுரிமை திருத்த சட்டம், அக்னிபத் திட்டம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில், ஆளும் கட்சிக்கு நெருக்கடி தர கிடைக்கும் வாய்ப்புகளையும் ராகுல் சரியான முறையில் பயன்படுத்தலாம்.
சபையை சுமுகமாக நடத்த சபாநாயகருக்கு ஒத்துழைப்பு தருவதன் வாயிலாக, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடப்பதையும் உறுதி செய்யலாம்.