ADDED : மார் 09, 2025 08:55 AM

தங்களுக்கு கிடைக்காத படிப்பு மகளுக்கு கிடைக்க வேண்டுமென நினைத்த பெற்றோர் தேவைக்கு அதிகமாகவே கொத்தனர் என தன் கதையை தொடங்கிய அனு, மீடியா, பொழுதுபோக்கு துறையில் எம்.பி.ஏ., படித்துள்ளார். சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைதலில் அதிக ஆர்வம் கொண்டவர்.
ஒரு வீட்டை இருப்பதை வைத்து எப்படி அழகுபடுத்த வேண்டுமென்பதிலும் திறமை உள்ளவராக இருந்துள்ளார். கல்லுாரி படிப்பு முடித்து துபாயில் தனியார் வானொலியில் வாடிக்கையாளர் மேலாளராக பணியை தொடங்கினார். 'சைமா' போன்ற விருதுகள் விழாவிலும் பங்காற்றிய அனுபவம் கொண்ட அனு மீண்டும் தமிழகம் திரும்பும் சூழல் உருவானது.
தொலைக்காட்சி சீரியல்களில் எக்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசராக பணியாற்றினார். திரைப்படத்துறையிலும் தன் பங்கினை அளித்திருக்கிறார். நல்ல வருமானம், படித்த படிப்பிற்கான வேலைதான் எனினும் சுயமாக தொழில்முனைவோர் ஆக வேண்டுமென்ற எண்ணம் இருந்துள்ளது. படிக்கும் காலங்களில் வடமாநில நண்பர்களின் வீட்டிற்கு சென்றபோது அது சிறிய வீடாக இருந்தாலும் அழகாக, இருக்கிற பொருட்களை வைத்து ரசிக்கும்படியாக வைத்திருந்திருந்ததை பார்த்து அதில் ஈடுபாடு ஏற்பட்டது. இன்டீரியர் டிசைனிங் மீது இனம்புரியா ஆர்வம் ஏற்பட்டது.
ஓவியம் வரையும் அனுபவம் இதற்கு கைகொடுத்திருக்கிறது. இருக்கும் பொருட்களை வைத்து, மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு வீட்டை மாற்றியமைக்க முடியும் என நம்பியுள்ளார். முதலில் தனி ஆளாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் உதவியோடு பணியை தொடங்கினார். வீட்டை இன்டீரியர் செய்வது ஏழைகளுக்கு எட்டாக்கனி. வசதி படைத்தவர்கள், சொந்தமாக பெரிய வீடு வைத்திருப்பவர்கள் மட்டுமே பெரும்தொகையை ஒதுக்கி வீட்டை அழகுபடுத்தும் சூழல் இருக்கிறது. அதனை மாற்ற விரும்பிய அனு 10க்கு 10 அறையாக இருந்தாலும் களத்தில் இறங்கி பணியாற்றுகிறார். இதனால் நடுத்தர மக்கள் அதிகம் இவரது சேவையை விரும்பினர்.
தற்போது பல தரப்பினருக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் பணியாற்றி, தனக்கு கீழ் 20 பேரை பணியமர்த்தி ஒரு நிறுவனமாக உருவாக்கி உள்ளார். பெயிண்டிங் தொடங்கி அனைத்து பணிகளையும் தன் நிறுவனம் மூலம் செய்து வீட்டை முழுமை பெறுமளவிற்கு பணியை நடத்தி வருகிறார்.
அனு கூறியதாவது: நாம் எவ்வளவுதான் வெளியே சுற்றினாலும், இறுதியாக வந்து சேர்வது நமது வீடுதான். அந்த வீட்டினை அழகுபடுத்தி, ரசிக்கும்படி மாற்றினால் வாழ்க்கை முறையே மாறும். இந்த இடத்தில் இந்த பொருள் இருக்குமென அழகுபடுத்திவிட்டால் குழந்தைகளுக்கு சுயவொழுக்கம் உருவாகிறது. எல்லோருக்கும் இது சேர வேண்டும். அதற்கேற்ப பணியை வடிவமைத்துக்கொள்கிறேன்.
சிறு வயதிலிருந்தே கற்ற வரைதிறனும், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் தொழில்முனைவோராக வளர வாய்ப்பளித்திருக்கிறது என்றார்.
தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து ஆற்றலோடும், உற்சாகத்தோடும் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்ற வரிகளை மெய்ப்பிக்கும் விதமாக சினிமா, சீரியல் என நல்ல சம்பளத்தோடு பணியாற்றினாலும் அதனை உதறிவிட்டு தொழில் முனைவோராகி சாதித்து வருகிறார் விழுப்புரத்தை சேர்ந்த அனு.